சு.உ.சவ்பாக்யதா
ட்விட்டர் நிறுவனம், தன்னுடைய ஊழியர்கள் சிலரை பணிநீக்கம் செய்ய முடிவுசெய்திருக்கிறது. எலான் மஸ்க் ட்விட்டரின் தலைமைப் பொறுப்பை ஏற்ற பிறகு நடக்கும் 8-வது சுற்றுப் பணிநீக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கி, ரஷ்யா- உக்ரைனுக்கிடையேயான போரில் பங்கெடுத்துவருவதாக, நேட்டோ நாடுகள்மீது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் குற்றம்சாட்டியிருக்கிறார்.
ஐரோப்பிய ஆணையத்தின் சீனாவுக்கான தூதர் ஃபூ காங், "ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் இந்த ஆண்டு சீனாவுக்குப் பயணம் செய்வார்கள்" என்று அறிவித்திருக்கிறார். ஐரோப்பிய ஆணையத்தின் அதிபர் Ursula von der Leyen, ஐரோப்பிய கவுன்சிலின் அதிபர் Charles Michel இந்த ஆண்டு, ஜூன் மாதத்துக்குள் பயணம் செய்வார்கள் என்று கூறப்படுகிறது.
தெற்கு இத்தாலிப் பகுதியில் அகதிகளுடன் சென்ற படகு, பாறை ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை சுமார் 60 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.
நோக்கியா நிறுவனம் தனது லோகோவை மாற்றப்போவதாக அறிவித்திருக்கிறது. 60 வருடங்களுக்குப் பிறகு, தொழிலை மேம்படுத்தும் யுக்தியாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் பிரபல காமிக்ஸ் தொடரான 'டில்பர்ட்' (Dilbert) இனவெறி சார்ந்த கருத்துகளால் தற்போது நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்தத் தொடரின் படைப்பாளரான ஆடம், அமெரிக்க கறுப்பினத்தவர்களுக்கு எதிராக ஒரு யூடியூப் காணொளியில் கருத்து தெரிவித்தது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
கடந்த ஆண்டு மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, காலமான நடிகை ஒலிவியா நியூட்டனுக்கு ஆஸ்திரேலியாவிலுள்ள அரசு நினைவிடத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இஸ்ரேல், பாலஸ்தீனத்துக்கிடையேயான மோதல் தொடர்பாக, ஜோர்டானில் பேச்சுவார்த்தை நடத்த முடிவுசெய்யப்பட்டிருக்கிறது. வெஸ்ட் பாங்கில் நடக்கும் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
ரஷ்யாவுக்கு எதிரான போரில் பங்கேற்றுவரும் உக்ரைன் ராணுவ உயரதிகாரியை, எந்தவிதக் காரணமும் கூறாமல் பதவியிலிருந்து நீக்கியிருக்கிறார் அந்த நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி.