டிசம்பர் 26... `ஆறாத வடு’ - சுனாமியின் 18-ம் ஆண்டு நினைவு தினம்!

VM மன்சூர் கைரி

உலகை உலுக்கிய பேரழிவுகளில் சுனாமியும் ஒன்று. 2004-ம் ஆண்டு கிறிஸ்துமஸின் மறுதினம் ஏற்பட்ட சுனாமி பேரழிவின் 18-வது நினைவு தினம் இன்று. மீனவர்கள், பொது மக்கள் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

2004 டிசம்பர் 26-ம் தேதி இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் உள்ள கடல்பகுதியில் 9.1 முதல் 9.3 ரிக்டர் அளவிற்குப் பதிவான நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சுனாமியால் சுமார் 14 நாடுகளுக்கு மேல் பாதிக்கப்பட்டது.

சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அன்று வந்த சுனாமி அலைகள் சுமார் 30 மீட்டர் (100 அடி) உயரத்துக்கு எழுந்தன.

இந்தியாவில், குறிப்பாகத் தமிழகக் கடலோர மாவட்டங்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டன. மறக்கமுடியாத நாளாக அந்த தினம் அனைவரின் உள்ளத்திலும் வடுவாக உள்ளது.

சுனாமியன்று அதிகாலையில் கடற்கரையில் நடைப்பயிற்சிக்குச் சென்றவர்கள், தூங்கிக் கொண்டிருந்த மீனவர்கள், கடற்கரையில் கடை வைத்துள்ளவர்கள் என நூற்றுக்கணக்கான மக்களை சுனாமி ஆழிப்பேரலை அள்ளிச் சென்றது.

சென்னை முதல் குமரி வரை கடலோரத்தில் உள்ள அனைத்து கடலோர மாவட்டங்களையும் இந்த சுனாமி பாதித்தது.

சுனாமியில் தமிழகத்தில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். நாகப்பட்டினத்தில் மட்டும் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

கோடிக்கணக்கான பொருள்கள், இயற்கை வளங்கள், கால்நடைகள், வீடுகளையும், உறவினர்களையும் இழந்து தவித்தது தமிழகம். பாதிப்பின் தாக்கத்திலிருந்து மீண்டு வரவே பல மாதங்கள் ஆகின.

சுனாமி

இந்த சுனாமியால் பாதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 14 நாடுகளில் சுமார் 2,29,866 பேர் உயிரிழந்தனர். மேலும் 1,25,000 பேருக்கு மேல் காயமடைந்தனர். 43,786 பேர் காணாமல் போயினர். மேலும் 17 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்கள் வாழ்விடத்தை இழந்து இடம்பெயர்ந்துள்ளனர்.

பல்வேறு மீனவர்கள் சுனாமியில் சிக்கி உயிரிழந்ததால் அவர்களையே நம்பியிருந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்றுவரை அந்தத் துயரத்திலிருந்து மீண்டுவரமுடியாமல் தவித்து வருகின்றனர்.