வீட்டிலேயே பனீர் செய்வது எப்படி? I Visual Story

இ.நிவேதா

பனீர் என்றாலே கடையில்தான் வாங்க வேண்டும் என்பது இல்லை. வீட்டிலேயே எளிமையான முறையில் பனீர் செய்யலாம்.

Paneer

கொழுப்பு அதிகமுள்ள புதிய பாலை 6 கப் எடுத்து அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி மிதமான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும். பனீர் தயாரிக்க பசுவின் பால், எருமை பால் அல்லது ஆட்டு பால் பயன்படுத்தலாம்.

Milk

தயிர், எலுமிச்சை சாறு அல்லது வினிகர் போன்ற அமில உணவுப் பொருள்களில் ஏதேனும் ஒன்றை, பாலுடன் சேர்க்கவும். பால் கொதித்த உடன் அடுப்பை அணைத்து 2 தேக்கரண்டி வினிகர் அல்லது 1/4 கப் தயிர் சேர்த்து 1 நிமிடம் வரை கிளறி விட வேண்டும்.

Lemon Juice | Photo: Pixels

பால் உடனடியாக திரியும். இல்லையெனில், அடுப்பை மீண்டும் ஆன் செய்து, முழுவதுமாக திரிந்து வரும் வரை கொதிக்க விட வேண்டும். தேவைப்பட்டால், மற்றொரு டீஸ்பூன் வினிகர்/ எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.

பால் முழுவதுமாக திரிந்தவுடன் அடுப்பை அணைத்து விட வேண்டும். சரியான நேரத்தில் அடுப்பை அணைப்பது முக்கியம். நீங்கள் தொடர்ந்து சமைத்தால், பனீர் கடினமாக மாற வாய்ப்புண்டு.

சரியாகச் செய்திருந்தால், திரிந்த பாலானது மஞ்சள் அல்லது பச்சையாக இருக்கும்; வெள்ளையாக இருக்காது. பால் முழுவதுமாக திரிந்த பிறகு தொடர்ந்து கொதிக்க வைக்க வேண்டாம்.

ஒரு பெரிய கிண்ணத்தின் மேல் ஒரு வடிகட்டி வைத்து, அதன் மேல் சுத்தமான சீஸ் துணி அல்லது மஸ்லின் துணியை பயன்படுத்தி திரிந்த பாலை வடிகட்டவும். ஒரு மெல்லிய புதிய, துவைத்த கைக்குட்டையை கூட இதற்கு பயன்படுத்தலாம்.

அதிகப்படியான தண்ணீரை பிழிந்து, இறுக ஒரு முடிச்சை போட்டு 30 நிமிடங்கள் வரை தொங்கவிடவும். இது அதிகப்படியான நீரை வெளியேற்ற உதவும். பனீர் வடிகட்டிய பிறகும் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும்.

அதை ஒரு தட்டையான வடிகட்டி/தட்டு அல்லது மரப் பலகையில் வைத்து, துணியை நன்றாக முறுக்கி வட்ட வடிவத்தை உருவாக்கவும்.

குறைந்தது 2.5 முதல் 3 கிலோ எடையுள்ள ஒரு கனமான பொருளை சுமார் 3 முதல் 4 மணி நேரம் வரை அதன் மேல் வைக்கவும்.

பிறகு துணியிலிருந்து பனீரை தனியாக எடுத்து, வேண்டுகிற அளவில், சதுரங்களாக நறுக்கிப் பயன்படுத்தி கொள்ளலாம்.