இ.நிவேதா
மலச்சிக்கல் விழிப்புணர்வு மாதம் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தத் தருணத்தில், மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணம், அதிலிருந்து மீளும் முறைகள் குறித்துப் பார்ப்போம்.
சாப்பிட்ட உணவு முறையாக செரிமானம் அடைந்து, உடல் இயக்கங்கள் சிறப்பாக இருப்பதைச் சுட்டிக்காட்டும் காரணியே மலம்.
உடல் உழைப்பு இல்லாதவர்கள், அதிகமாக தேநீர், காபி அருந்துபவர்கள், தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், மலத்தை அடக்குபவர்கள் போன்றவர்களுக்கு மலம் கழிப்பதில் சிரமம் ஏற்படும்.
இயல்பாக வெளியேறும் மலத்தை அடக்கும்போது, மலத்தில் இருக்க வேண்டிய நீர்த்துவம் மீண்டும் மீண்டும் உறிஞ்சப்பட்டு, வறண்ட மலமாக வெளியேறும். வறண்ட மலம், மலப்பாதையில் சிக்கல்களை உண்டாக்கி, பௌத்திரம் வரை கொண்டு செல்லும்.
மலம் வெளியேறுவதில் சிரமம் இல்லை. ஆனால் டீ குடித்தால், சிகரெட் பிடித்தால், மாத்திரைகள் விழுங்கினால்தான் மலம் வெளியேறுகிறது என்றால் உடனடியாகப் பழக்கத்தை மாற்றுவது நல்லது. எந்தப் பொருள்களின் உதவியும் இன்றி, இளகிய மலமாக வெளியேறுவதே உடலுக்கு நல்லது.
துரித உணவுகளில் இருக்கும் ரசாயனங்கள் குடல் இயக்கங்களைத் தடுத்து, மலச்சிக்கலை ஏற்படுத்தும். அளவுக்கு அதிகமாக உணவுகளை உண்பது, தேவையான அளவு தண்ணீர் பருகாதது போன்றவை மலச்சிக்கலை உண்டாக்கும் மிக முக்கிய காரணிகள்.
கல் போல கடினமான மலம், முழுமையாக மலம் வெளியேறாமல் துன்பப்படுவது, வயிற்றுவலி, வயிற்று உப்புசம், வாயு பிரிதல் என மலச்சிக்கல் உண்டாக்கும் அறிகுறிகளே கடுமையான உணர்வுகளைக் கொடுப்பவை.
சில வகை மருந்துகளை உட்கொள்வதாலும், முதிர்ந்த வயதின் காரணமாகவும் மலச்சிக்கல் ஏற்படலாம். மன அழுத்தத்துக்கும் மலச்சிக்கலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
மூட்டுகளில் எந்தப் பிரச்னையும் இல்லையெனில், நெடுங்காலமாக வழக்கத்தில் உள்ள குத்தவைத்து மலம் கழிக்கும் முறையைப் (Squatting position) பின்பற்றினாலே மலம் இயல்பாக வெளியேறும்.
மேலைநாட்டுக் கழிப்பறையைப் பயன்படுத்துபவர்களுக்கு மலச்சிக்கல் தொந்தரவு அதிக அளவில் இருக்கும். குத்தவைத்து மலம் கழிக்க சிரமப்பட்டு, மேலைநாட்டுப் பாணியில் வெஸ்டர்ன் டாய்லெட்டில் அமர்ந்துகொண்டு மலம் கழிக்கும்போது, முழுமையாகக் கழிவுகளை வெளியேற்ற முடியாது.
மலச்சிக்கல் ஏற்பட்டவுடன், உடனடியாக மலமிளக்கி மருந்துகளின் ஆதரவைத் தேடக் கூடாது. தொடர்ந்து மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணத்தை ஆராய்ந்து, உணவு மற்றும் வாழ்வியல்முறை மாற்றங்களின் மூலம் சரிசெய்ய முயல வேண்டும்.
திடீரென மலம் கழிப்பதில் சிரமம் ஏற்பட்டால், முந்தைய நாள் சாப்பிட்ட உணவின் தன்மையை ஆராய்ந்தால் போதும். காரணம் அதுவாகவும் இருக்கலாம்.
மலச்சிக்கல் அநேக நோய்களுக்கு அடிநாதம். சரும நோய்களில் தொடங்கி இதயநோய்கள் வரை, மலச்சிக்கலால் உருவாகலாம். மலம் இளகலாக வெளியேறாமல், கடினமாக வெளியேறினால் மூலம், ஆசனவாய் வெடிப்பு (Fissure), பெளத்திரம் (Fistula) போன்ற நோய்கள் உண்டாகும்.
மலச்சிக்கல் என்பது தீர்க்க முடியாத நோயல்ல. சில மாற்றங்களால் சரி செய்யக்கூடியது. நமது செரிமான உறுப்புகளைக் கவனிக்கச் சொல்லும் சிக்கல்தான் மலச்சிக்கல்... இனிமேல் கவனிப்போம்!