இ.நிவேதா
`உடற்பயிற்சி செஞ்சா ஆண்மை குறைஞ்சுடும், குழந்தை பொறக்காது' என்கிற அச்சம் இன்றைக்கும் சிலரிடம் இருக்கிறது. ஆனால், அதில் உண்மை இல்லை.
மனித உடல் என்பது இயங்குவதற்காகவே படைக்கப்பட்டது. 12 மணி நேரம்கூட உடலுழைப்பு செய்யலாம். வேட்டை, விவசாயம் என்று பல மணி நேரம் உழைத்தவர்கள்தாம் மனிதர்கள்.
கடந்த 100 வருடங்களாகத்தான் நம்மில் பலரும் வொயிட் காலர் ஜாப் செய்ய ஆரம்பித்துவிட்டோம். அதே நேரம், சுவைக்கு ஆசைப்பட்டு வறுத்தது, பொரித்தது, இனிப்பு வகைகள் என்று கலோரி அதிகமான உணவுகளையும் அதிகம் சாப்பிட ஆரம்பித்துவிட்டோம்.
இதன் விளைவுதான் நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற வாழ்வியல் பிரச்னைகள். இந்தப் பிரச்னைகள் வராமல், ஆரோக்கியமாக வாழ உடற்பயிற்சி அவசியம்.
ஆண்களுக்கு, உடற்பயிற்சி செய்யும்போது டெஸ்டோஸ்டீரான் சுரப்பு தூண்டப்பட்டு ஆண்மை அதிகரிக்கும். உடற்பயிற்சி செய்யாமல் இருப்பவர்கள், கலோரி அதிகமான உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சருமத்துக்கு அடியில் கொழுப்பு அதிகமாகச் சேரும்.
ரத்தத்திலிருக்கிற ஆண் ஹார்மோன் சருமத்துக்கடியில் இருக்கிற அந்தக் கொழுப்புடன் இணைந்து பெண் ஹார்மோனாக மாறி ரத்தத்துடன் கலக்கும். இதை அரோமைடிஸேஷன் (aromatization of androgens to estrogen) என்போம். இது ஆண்மைக்குறைவை ஏற்படுத்தும்.
பெண்களுக்கு உடற்பயிற்சி ஆரோக்கியத்தையும், நல்ல கருத்தரிப்புத் திறனையும் கொடுக்கும். கருத்தரித்த பிறகு, மருத்துவ ஆலோசனைபடி உடற்பயிற்சிகளைத் தொடரலாம். சில பெண்களுக்கு, கர்ப்பகாலத்தில் பிரச்னை இருக்கலாம் என்பதால் மருத்துவர் ஆலோசனையின்படி அவர்கள் உடற்பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும்.
சில வருடங்களுக்கு, `விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் போட்டிக்கு முந்தைய நாள் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. விந்தணுக்களை இழந்தால் அவர்களால் மறுநாள் சிறப்பாக பர்ஃபார்ம் செய்ய முடியாது’ என்று ஒலிம்பிக் கமிட்டி வரைக்கும் நம்பிக்கொண்டிருந்தார்கள்.
அதனால், ஒலிம்பிக் போட்டிக்கு மனைவியோடு வரக்கூடாது என்ற தடையும் விதித்திருந்தார்கள். சமீபத்தில் வெளியான `சார்பட்டா பரம்பரை' படத்தில்கூட இப்படியொரு காட்சி வரும். ஆனால், அது உண்மையல்ல.
சொல்லப்போனால், முந்தைய நாள் கொண்ட தாம்பத்திய உறவு, மறுநாள் அவர்களுடைய திறனை அதிகரிக்கிறது என்பதைப் பல ஆய்வுகள் உறுதிப்படுத்தி விட்டன. விளைவு, தற்போது ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள வருகிற வீரர்களைக் குடும்பமாக ஹோட்டலில் தங்க அனுமதிக்கிறார்கள்.
ஆனால், ஒரு போட்டியில் ஜெயிக்க வேண்டும், அல்லது வேறு ஏதாவது ஃபிட்னஸ் காரணங்களுக்காக ஒரு நாளைக்கு 8 முதல் 10 மணி நேரம் ஜிம்மிலேயே இருப்பவர்களுக்கு வளர்சிதை மாற்றங்கள் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் நிகழலாம்.
பெண்களுக்கு மாதவிலக்கு சுழற்சியில் மாற்றங்கள் வரலாம். இதனால், பிற்காலத்தில் கருத்தரிப்பதில் பிரச்னைகள் வரலாம்.
மற்றபடி, ஆரோக்கியத்துக்காக ஜிம்முக்குச் சென்று உடற்பயிற்சி செய்கிற ஆண்களுக்கு ஆண்மைக் குறைபாடு வராது. பெண்களுக்குக் கருத்தரிப்பதில் சிக்கலும் வராது