இ.நிவேதா
அன்பில் ஆரம்பிக்கப்படும் தாம்பத்ய உறவுக்கு, வாய் துர்நாற்றம், வியர்வை வாடையைப் போலவே சங்கடம் தருகிற இன்னொரு விஷயம், அந்தரங்க உறுப்பில் வருகிற கெட்ட வாடை.
ஆணுறுப்புக்கும் அதன் மேலுள்ள தோலுக்கும் இடையில் ஸ்மெக்மா என்ற திரவம் சுரக்கும். இதனுடன் அந்தப் பகுதியில் இருக்கிற பாக்டீரியா, ஈரப்பசை, இறந்த செல்கள் ஆகியவை சேரும்போது, ஆணுறுப்பில் வாடை வரும்.
ஆணுறுப்பைவிடப் பெண்ணுறுப்பில் திரவ சுரப்பு அதிகமென்பதால், பாக்டீரியா மற்றும் இறந்த செல்களுடன் சேர்ந்து வாடை இன்னமும் அதிகமாக இருக்கும்.
ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி, அந்தரங்க உறுப்பில் வாடை வருவது இயல்பான ஒன்றுதான். என்றாலும், உறவில் ஈடுபடும் பலருக்கும் அது அசெளகர்யத்தை ஏற்படுத்தலாம். அதனால், தாம்பத்ய உறவுக்கு முன் குளிக்க வேண்டும்.
இரவில் குளிக்க நேரமில்லை என்பவர்கள், உறவுக்கு முன்னால் அந்தரங்க உறுப்புகளைத் தண்ணீரும் சோப்பும் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். திட்டமிடாமல் திடீரென உறவு கொள்பவர்களுக்கும், ஓரல் செக்ஸ் செய்பவர்களுக்கும் இந்த வழிமுறை உதவும்.
குளித்தாலும், சுத்தம் செய்தாலும், லேசாகக் கெட்ட வாடை வருகிறது என்பவர்கள் ஃபெடரல் ஃபேனை தலைப்பக்கமிருந்து கால் பக்கமாகக் காற்று வீசுவதுபோல வைத்துவிட்டு உறவு கொண்டால், கெட்ட வாடை அவ்வளவாகத் தெரியாது.
அந்தரங்கப் பகுதியில் கெட்ட வாடை இருப்பதால், நீங்கள் சுத்தமாக இல்லை என்று அர்த்தமில்லை. அப்படியே அழுக்கு இருந்தாலும் அது இறந்த செல்களாக இருப்பதற்கே வாய்ப்பு அதிகம்.
ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான இறந்த செல்கள் உதிர்ந்து, புதிய செல்கள் உருவாகி, நாமெல்லாம் 17 நாள்களுக்கு ஒருமுறை புது மனிதர்களாக உருவாகிக்கொண்டிருக்கிறோம்.
நம்முடைய தோல் 7 அடுக்குகளைக் கொண்டது. மேலே இருக்கிற 2 அடுக்குகளும் இறந்த செல்கள்தான். அதனால்தான், உடம்பைத் தேய்க்கும்போதெல்லாம் அழுக்குபோல திரண்டு வருகிறது.
ஆணோ, பெண்ணோ ஸ்ட்ராங்கான கெமிக்கல்ஸ் கொண்ட திரவங்களைப் பயன்படுத்தி அந்தரங்க உறுப்பைச் சுத்தம் செய்வதும், அங்கு கெமிக்கல்ஸ் கலந்த வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்துவதும் நல்லதல்ல.
பெண்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். பெண்ணுறுப்பில் நல்ல பாக்டீரியாக்களும் இருக்கும். அதுதான் கெட்ட பாக்டீரியாக்களிடம் இருந்தும் வைரஸிடம் இருந்தும் பெண்ணுறுப்பை பாதுகாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்ணுறுப்பில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை கெமிக்கல்ஸ் கலந்த திரவங்களைப் பயன்படுத்தி நீக்கிவிட்டால், புதிதாக ஒரு தொற்று பெண்ணுறுப்பில் ஏற்படலாம்.