இ.நிவேதா
சுய இன்பம் செய்யும்போது ஆணுறுப்பிலிருந்து ரத்தம் வருவது இயல்பானதா, இல்லை ஆபத்தானதா, இதற்கு என்ன காரணம், ஏதாவது பிரச்னையின் அறிகுறியா என்பது போன்ற பல கேள்விகள் ஆண்களுக்கு உண்டு.
சுய இன்பம் செய்யும்போது மட்டுமல்ல, தாம்பத்திய உறவின்போதும் சில ஆண்களுக்கு ஆணுறுப்பிலிருந்து ரத்தம் வரலாம். இது இயல்பான ஒன்றுதான்.
இதற்கு முக்கியமான காரணம், ஆணுறுப்பின் அடிப்பகுதியில் மெல்லிய இழை ஒன்று ஒட்டிக்கொண்டிருக்கும். இது மிகவும் மென்மையான பகுதி. வேகமாக சுய இன்பம் செய்யும்போதோ, வேகமாக உறவுகொள்ளும்போதோ இந்த இழை கட் ஆகலாம்.
சில ஆண்களுக்கு இந்த இழை முதலிரவின்போது கட் ஆகி ரத்தம் வரலாம். அப்போது ஆணுறுப்பிலிருந்து ரத்தம் வரும். இந்த ரத்தம் ஃபிரெஷ்ஷாக இருக்கும். அதாவது, சிவப்பு நிறத்தில் புது ரத்தமாக இருக்கும்.
விந்து தனியாகவும், ரத்தம் தனியாகவும், கொஞ்சம் இரண்டும் கலந்தும் வரும். இது ஜஸ்ட் காயம் மட்டுமே. இந்தக் காயம் ஆறுகிற வரைக்கும் சுய இன்பமோ, தாம்பத்திய உறவோ மேற்கொள்ளக் கூடாது. மற்றபடி, இதில் எந்தப் பிரச்னையும் வராது. பயப்பட தேவையில்லை.
பொதுவாக விந்து என்பது ஏற்கெனவே உருவாகியிருக்கிற திரவம் கிடையாது. 5% விந்துப்பையிலிருந்தும், 45% புராஸ்ட்டேட் சுரப்பியிலிருந்தும், மீதம் செமினல் வெசிக்கிள் சுரப்பியிலிருந்தும் வெளிவரும்.
விந்தாக வெளியே வரும்போது புராஸ்ட்டேட் சுரப்பியிலோ, செமினல் வெசிக்கிளிலோ பிரச்னை இருந்தால் விந்துடன் ரத்தம் கலந்து வரும். இந்த ரத்தம் புது ரத்தமாக இருக்காது. கருஞ்சிவப்பாக இருக்கும்.
இந்த நிறத்தில் ரத்தம் வந்தால், கண்டிப்பாக பரிசோதனை செய்ய வேண்டும். 95% இது ஆபத்தில்லாத பிரச்னைதான். அரிதாக புராஸ்ட்டேட் கேன்சராக இருக்கலாம்.
சுய இன்பம் செய்யும்போதும், உறவு கொள்ளும்போதும் ரத்தம் வந்தால் சம்பந்தப்பட்ட கணவன், மனைவி இருவருமே பயந்துவிடுவார்கள்.
ஆணுறுப்பில் ரத்தம் வருகிறது என்றால், குழப்பம், அச்சத்தை தவிர்க்க, உடனே மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறவும்.