ஜெ.ஷோ.ஜெபிஷா
பெரும்பாலும் நம் ஆழ்மனதின் எண்ணங்கள்தான் நம் முகத்தில் பிரதிபலிக்கும். நம் மனநிலைக்கும் சிந்தனைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நம் சிந்தனைகள்தான் பல வேளைகளிலும் நம் மனநிலையை நிர்ணயிக்கின்றன எனலாம்.
மகிழ்ச்சியாகச் சிரித்துக்கொண்டிருக்கும் நபர் அடுத்த நொடியே முகம்வாடி இருப்பதை நாம் கண்டிருக்கலாம். காரணம் ஆழ்மனதில் அலைபாயும் சிந்தனைகள். சிலர் தங்களது மனநிலை மாறுபாடு, அதனால் சில நேரங்களில் வரும் சோர்வு, மன அழுத்தம் போன்றவற்றை வேறு ஏதோ நோய்க்கூறுகள் என நினைத்து பயப்படுகின்றனர். மனநல மருத்துவரை அணுகவே தயங்குகின்றனர்.
ஒரு சிலர் வருத்தத்தில் இருக்கும்போது உணவு உட்கொள்ளுவர். வேறு சிலர், தனிமையை விரும்புவர். ஒரு சிலர் கோபத்தை மௌனமாக வெளிப்படுத்துவர். இன்னும் சிலரோ, கோபத்தில் ருத்ர தாண்டவமே ஆடிவிடுவர். ஒரு சிலர் மகிழ்ச்சியை ஆடிப்பாடி கூச்சலிட்டு வெளிப்படுத்துவர். ஆனால், வேறு சிலர் சிறு புன்னகை, ஆனந்தக் கண்ணீரை உதிர்த்துவிட்டுச் செல்வர். வருத்தம், மகிழ்ச்சி, கோபம் என ஒவ்வோர் உணர்ச்சியும் ஒவ்வொரு மனிதருக்கும் மாறுபடும்.
பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், தான் மன அழுத்தத்துக்கு உள்ளானதைத் தொடர்ந்து பகிர்ந்து வருபவர். சமீபத்திலும் மனம் திறந்துள்ளார். 2015-ம் ஆண்டிலிருந்து தான் மனஅழுத்தத்தை எதிர்கொள்வதாகக் கூறியுள்ளார். அதோடு மன ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். மேலும், மன அழுத்தத்திலிருந்து வெளிவர குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் மிகவும் முக்கியம் எனக் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 50%-க்கும் மேலானவர்கள் மன அழுத்த பிரச்னைகளுக்கு உள்ளாகின்றனர். 10,000 பேரில் 2,443 பேர் தினமும் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர், 10,000 பேரில் 21.1% பேர் மனநிலை ஆரோக்கியம் சார்ந்த பிரச்னைகளால் தற்கொலை செய்துகொள்கின்றனர் என்கிறது ஆய்வு. இந்தியாவில் மூன்றில் ஒருவர் மன அழுத்தத்துடன் வாழ்கின்றனர் என்றும் குறிப்பிடுகிறது அந்த ஆய்வு. உலக அளவில் 300 மில்லியன் பேர், மன அழுத்தப் பிரச்னைகளுக்கு உள்ளாகிறார்களாம்.
படிப்புச்சுமை, வேலைப்பளு என சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மன அழுத்தத்தை ஏதோ ஒரு காரணத்தால் தினமும் எதிர்கொள்கிறார்கள். ஆனால், எல்லா வித மன அழுத்தங்களையும் காலத்தால் மாற்ற இயலும். மேலும் ஆரோக்கியமான உணவுகள், நடைப்பயிற்சி, யோகா போன்றவற்றைப் பின்பற்றுவதும் அதற்குக் கைகொடுக்கும்.