கி.ச.திலீபன்
கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு ஏற்படும் நீரிழிவை `கர்ப்பச் சர்க்கரை’ என்கிறோம். இப்பிரச்னை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இன்றைக்கு கர்ப்பம் தரிக்கிற பெண்களுக்கு அனைத்துப் பரிசோதனைகளோடும் ரத்த சர்க்கரை அளவு பரிசோதனையும் மேற்கொள்ளும் அளவுக்கு கர்ப்பச்சர்க்கரை பிரச்னை தீவிரமாக உள்ளது.
கர்ப்பச் சர்க்கரைக்கு ஆளாகும் பெண்களில் 50 சதவிகிதம் பேர் அடுத்த பத்தாண்டுகளில் நீரிழிவுக்கு ஆட்பட வாய்ப்பிருக்கிறது. எனவே அதனை ஓர் எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொண்டு செயலாற்ற வேண்டும்.
இன்றைக்கு உணவுப் பழக்கம் மாறிப்போய் விட்டது. ஜங்க் ஃபுட்களை அதிகம் உட்கொள்கிறோம். நல் உணவு, உடற்பயிற்சி, உறக்கம், இயற்கையோடு இணைந்த வாழ்வு ஆகியவை உடல் நலத்துக்கு மிக முக்கியமானவை.
கர்ப்பச் சர்க்கரை மரபுரீதியாக குழந்தைக்கும் நீரிழிவை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது என்பதால் மிகவும் எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டும்.
ஜங்க் உணவுகள், துரித உணவுகள், பதனிடப்பட்ட உணவுகளைத் தவிர்த்து விட்டு, சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
உடல் உழைப்பு முற்றிலும் இல்லாமல் போவதும் சர்க்கரை நோய்க்கு முதன்மைக் காரணம் என்பதால் போதுமான அளவு உடல் ரீதியான உழைப்பில் ஈடுபட வேண்டும். வாய்ப்பில்லையெனில் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.