இ.நிவேதா
சுகப்பிரசவம் பெண்ணுறுப்பைத் தளர்வடையச் செய்யுமா? அப்படித் தளர்வடைந்தால், பெண்ணுறுப்பை இறுக்கமாக்க என்ன செய்ய வேண்டும். இந்தக் கேள்விகள் கர்ப்பமாக இருக்கிற பெண்களுக்கு மட்டுமல்ல, அவர்களுடைய கணவர்களுக்கும் இருக்கின்றது.
சுகப்பிரசவத்தில், குழந்தையானது தாயின் பெண்ணுறுப்பு வழியாக வெளிவருகிறது. அந்த நேரத்தில், குழந்தை வெளிவருவதற்கு ஏற்றவாறு பெண்ணுறுப்பின் தசைகள் விரிந்து கொடுக்கும்.
குழந்தை வெளிவந்ததும் விரிவடைந்த தசைகள் பொறுமையாக இயல்புநிலைக்குத் திரும்பிவிடும். இந்த நிகழ்வுகள் இயல்பானவை.
உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று `கெகல் எக்சர்சைஸ்' செய்து வந்தால், படிப்படியாகப் பெண்ணுறுப்பு இறுக்கமடைய ஆரம்பிக்கும்.
இந்த உடற்பயிற்சியைச் செய்வதற்கு முன்னால், கட்டாயம் சிறுநீர் கழித்துவிட வேண்டும். பயிற்சியை உட்கார்ந்தும் செய்யலாம் அல்லது படுத்தவண்ணமும் செய்யலாம்.
மனதுக்குள், `எனக்கு இப்போது அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டும்; ஆனால், எங்குமே கழிவறை இல்லை. சரி, பெண்ணுறுப்பை இறுக்கி சிறுநீரை அடக்குவோம்' என்று நினைத்துக்கொண்டு, பெண்ணுறுப்பின் தசையை இறுக்கமாக்க வேண்டும்.
1 முதல் 10 வரை மனதுக்குள் எண்ணிவிட்டு, சிறுநீர் கழிப்பதுபோல பெண்ணுறுப்பை ரிலாக்ஸ் செய்ய வேண்டும். தினமும் காலை, மாலை 10 நிமிடங்கள் இந்தப் பயிற்சியைச் செய்துவந்தால், சுகப்பிரசவத்தால் விரிவடைந்த பெண்ணுறுப்பு மீண்டும் படிப்படிப்படியாக தன் இயல்புநிலைக்குத் திரும்பி விடும்.
பிரசவத்துக்குப் பிறகு, அடிவயிறு தளராமல் இருக்க வீட்டின் மூத்த பெண்மணிகள், சுகப்பிரசவமான பெண்ணின் வயிற்றில் துணியை இறுக்கமாகக் கட்டுவார்கள். இதனால், அடிவயிற்றுத் தசைகள் இறுக்கமாகாது என்பதே உண்மை.
பிரசவமாகி உடல்நலம் தேறிய பிறகு, அடிவயிற்றுத் தசையை இறுக்கிப் பிடிப்பதுபோல செய்கிற பயிற்சியைச் செய்ய வேண்டும். தொடர்ந்து இப்படிச் செய்து வர, அடிவயிற்றுத் தசைகள் இறுக்கமாகி, உறுதி பெறும். இந்த உடற்பயிற்சியைச் செய்யும்போது, கூடுதல் பலனாக, தளர்ந்த பெண்ணுறுப்பிலும் இறுக்கம் வர ஆரம்பிக்கும்.
பெண்ணுறுப்புத் தளர்வும், அடிவயிற்றுத் தளர்வும் அதிகமாக இருக்கிறதென்றால், பிசியோதெரபிஸ்ட் உதவியையும் நாடலாம்.
பிரச்னைகளை வெளியே சொல்ல தயக்கப்பட்டுக் கொண்டே இருந்தால், தளர்ந்த பெண்ணுறுப்பும் சரியாகாது; அடிவயிறு இறங்கி தொந்தியும் வரும். பிரசவத்துக்குப் பிறகு உங்கள் உடலைப் பழைய நிலைக்குக் கொண்டு வருவது உங்கள் கைகளில்தான் இருக்கிறது.