இ.நிவேதா
ஆண்டுதோறும் 'மாதவிடாய் சுகாதார தினம்' மே மாதம் 28-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. மாதவிடாய் காலத்தில் பெண்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த தினம்.
பெண்கள் தங்களது ஆயுட்காலத்தில், 2,555 நாள்கள் (ஏறக்குறைய 7 ஆண்டுகள்) மாதவிடாய் நாள்களை எதிர்கொள்கின்றனர்.
மாதவிடாய் நாள்களில் நான்கு முதல் ஆறு மணி நேரத்துக்கு ஒருமுறை நாப்கினை மாற்ற வேண்டும். குறைந்தபட்சம், ஒரு நாளில் மூன்று முறையாவது மாற்ற வேண்டியது கட்டாயம்.
உள்ளாடைகள் அணிவதில் கவனமாக இருக்க வேண்டும். நைலான் உள்ளாடைகள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
சோப், வஜைனல் வாஷ் எதுவாக இருந்தாலும் பிறப்புறுப்பின் வெளிப்புறப் பகுதிக்கு மட்டுமே பயன்படுத்தவும். உள்பகுதியை நாப்கின் மாற்றும்போதெல்லாம் வெறும் தண்ணீரால் சுத்தம் செய்தாலே போதும்.
நல்ல சிவப்பு நிறம்தான் மாதவிடாய் உதிரத்தின் சரியான நிறம். பிரவுன் கலரில் நீர்போல வெளியேறினால், கருப்பையில் கசடு இருக்கிறது என்று அர்த்தம்.
பீரியட்ஸ் நேரத்தில் உடலில் உஷ்ணம் அதிகமாக இருக்கும். உடலில் உஷ்ணத்தைச் சீராக்கும் புள்ளி தலை உச்சியில் இருப்பதால் பீரியட்ஸின் முதல் நாளில் தலைக்குளிக்கச் சொல்கிறார்கள்.
வாயுத்தொல்லை இருப்பவர்களுக்கு மாதவிடாய் வலி அதிகமாக இருக்கும். உடம்பில் ரத்த அளவு சரியாக இல்லாமல், அனீமிக்காக இருந்தால்கூட, மாதவிடாய் ரத்தம் சீராக வெளியேற முடியாமல் வலி வரலாம்.
மாதவிடாய் நாள்களில் எளிமையாகச் செரிமானமாகக்கூடிய எந்த உணவையும் சாப்பிடலாம். பழங்கள், நட்ஸ், டிரை ஃப்ரூட்ஸ் நல்லது. அதிகப் புரதம் நிறைந்த உணவுகள், எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகள், ஜங்க் ஃபுட்ஸ், பாட்டில் டிரிங்ஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
பெண்கள் 'மென்ஷுரேஷன் டைரி' (Menstruation Diary) எனத் தனி கையேட்டை பின்பற்றுவது நல்லது. ஒவ்வொரு மாதமும் மாதவிடாய்க்கு முன் - பின் உடலில் நிகழும் மாற்றங்கள் எந்தத் தேதியில், எத்தனை நாள் இடைவெளியில் மாதவிடாய் ஏற்படுகிறது என்பதை அதில் குறிக்கலாம்.
நாப்கினை நீக்க வசதியில்லாத கழிப்பிடங்களில், உபயோகப்படுத்திய நாப்கினை பழைய காகிதத்தில் மடித்து கழிவறைக் குப்பைத்தொட்டி மூலம் அப்புறப்படுத்தவும்.
ஒருநாளில் 4, 5 முறை நாப்கின் மாற்றும்நிலை ஏற்பட்டால் பரவாயில்லை. அதற்கும் அதிகமானால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம்