இ.நிவேதா
உங்களிடம் ஒருவர் தன் காதலைப் பகிர்ந்தால் முதலில் யோசியுங்கள். அவர் அப்படிச் சொல்ல நீங்கள் ஏதேனும் வகையில் காரணமாக இருந்திருக்கிறீர்களா என யோசியுங்கள். அப்படி ஒரு நம்பிக்கையைத் தரும்படி நீங்கள் நடந்திருந்தாலும் தவறில்லை.
உங்கள் மனதிலிருப்பதை வெளிப்படையாகச் சொல்லுங்கள். அவர் நேர்மையாகத் தன் காதலைச் சொல்லியிருக்கிறார். நீங்களும் நேர்மையாக என்ன தோன்றுகிறதோ அதைச் சொல்லுங்கள்.
முடிந்தவரை அவர் ஈகோ பாதிக்காதபடி எடுத்துச் சொல்லுங்கள். அது நமக்கும் ஒரு விதத்தில் பாதுகாப்பான நடவடிக்கை என்பதை உணருங்கள்.
`உன் ஸ்டேட்டஸ் என்ன, என் ஸ்டேட்டஸ் என்ன?', `உன் அழகென்ன என் அழகென்ன?’ போன்ற எதிர்வினைகளைத் தவிருங்கள்.
சக மனிதன் மீதான அன்பில்தான் இந்த உலகமே இயங்குகிறது. போலவே காதலும் அந்த ஈர்ப்பும் இயல்பானது. அதைத் தவறாக நினைக்க ஏதுமில்லை. அதே சமயம் ஒருவர் தன் காதலைப் பகிர்வதால் அங்கே `நோ' சொல்லக்கூடாது என்ற கட்டாயமுமில்லை.
காதலைச் சொல்ல விரும்புவர்கள் யோசிக்க ஒன்றுமில்லையா? இருக்கிறது. நிறையவே இருக்கிறது. காதலைப் பகிர போகிறவருக்கு அது முக்கியமான தருணம். அதற்கு அவர் முழுமையாகத் தயாராகியிருப்பார்.
ஆனால், அதைக் கேட்கப் போகிறவரின் மனநிலை நமக்குத் தெரியாது. வேலையில் பாஸிடம் திட்டு வாங்கிவிட்டு வெளியே காட்டாமல் உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கலாம்.
அவருக்குத் தெரிந்த யாரேனும் மரணமடைந்திருக்கலாம்; தற்கொலைகூட செய்திருக்கலாம். வாழ்க்கையில் அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்திலிருக்கலாம்.
அவருக்கு யார் மேலேனும் காதல் வந்து அதை வெளிப்படுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருக்கலாம். இந்த மனக்குழப்பங்கள் அத்தனையையும் அவர் இன்னொருவருக்குச் சொல்லியிருக்க வேண்டுமென்ற அவசியமில்லை.
எனவே, உங்கள் காதலை நீங்கள் சொல்லும் தருணம் அவரும் அதே போல மகிழ்ச்சியடைய வேண்டுமென்ற அவசியமில்லை என்பதை உணருங்கள். சிலருக்கு உடனே ஏற்க சில தடைகள் இருக்கலாம்.
அதற்காகக் காதலே இல்லை என்றாகிவிடாது. அவருக்கு யோசிக்க நேரம் தேவைப்படலாம். எது எப்படியோ, காதலைப் பகிர்பவர்கள் பதிலை எதிர்பார்த்து பகிராதீர்கள்.
உங்கள் காதலைச் சொல்லிவிட்டால் போதும். எப்படியும் எதாவது ஒருவகையில் சில நாள்களில் அவர் எண்ணத்தைச் சொல்லிவிடுவார். இங்கே, காத்திருப்பதுதான் உங்கள் காதலுக்கு செய்யும் நியாயம்.
முக்கியமான விஷயம். காதல் திருமணத்திலோ, வாழ்நாள் முழுமையாகத் தொடர்தலோ மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால், அதற்காக காதலை திருமணம் பற்றிய உத்தரவாதமாகப் பார்க்கத் தேவையில்லை.
நட்பு காதலாக மாறலாம். ஒரு காதல் திருமண உறவாக மாறலாம். காதலைச் சொல்பவரிடம் அது பற்றி நிச்சயம் உரையாடலாம். கலந்தாலோசிக்கலாம்.
`லவ் பண்றேன்’ என்பவரிடம் `கல்யாணம் பண்ணிப்பன்னு சத்தியம் பண்ணு’ எனக் கேட்பது காதலாகாது.