தீபாவளி: பாரம்பர்ய காஞ்சிபுரம் பட்டின் சிறப்புகள் என்னென்ன?!| #VisualStory

போ.நவீன் குமார்

காஞ்சிபுரம் என்றாலே சட்டென்று நினையில் தோன்றுபவை காமாட்சி அம்மனும், பட்டுப்புடவைகளும் தான். உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடம் மிகவும் பிரபலமானது காஞ்சிப்பட்டு!

காஞ்சிபுரம்

இன்றளவும் காஞ்சிப்பட்டுப் புடவையை அனைவரும் விரும்பக் காரணம் அதன் தரம், ஆயுட்காலம், வண்ணம், ஜரிகை போன்றவை. காஞ்சிபுரம் பட்டுப் புடவைக்குத் தேவையான பட்டு நூலானது மல்பெரி பட்டுப்பூச்சி கூட்டில் இருந்து பட்டு இழைகளாகப் பெறப்படுகிறது. இந்தப் பட்டு இழைகளை சாயமிட்டு நூலாகத் திரிக்கப்படுகிறது.

பட்டு சேலை

பட்டுத் துணியானது பட்டு இழை, வெள்ளி, தங்கம், காப்பர் கலவையால் ஆனது. திரிக்கப்பட்ட பட்டு நூலோடு வெள்ளி இழையும் சேர்த்து பட்டு நூலாக உருவாக்கப்பட்டு, தங்க முலாம் பூசப்பட்டு ஜரிகையாக சேர்க்கப்படுகிறது. பொதுவாக, உயர் தர பட்டு ஜரிகைக்கு 0.5 கிராம் தங்க முலாம் பூசப்படுகிறது.

பட்டு

மற்ற பட்டுப்புடவை ரகங்களை விட காஞ்சிப்பட்டு சற்று அதிக எடையிருக்கும். இதற்குக் காரணம், காஞ்சிப்பட்டின் நெசவு முறை. காஞ்சிப்பட்டானது, நேர்க்கோட்டில் 2 ஜரி நூலிழையும், காஞ்சி நெசவில் பயன்படுத்தப்படும் குறுக்கு நூற்கோர்ப்பில் 4 பட்டு ஜரி நூலிழையும் ஒன்றாக இணைத்து நெசவு செய்யப்படுகிறது.

காஞ்சிப்பட்டில் நுணுக்கமான வேலைப்பாடுகளும், வடிவமைப்பும் புகழ்பெற்றவை. ராஜா ரவிவர்மனின் ஓவியம், மயில், அன்னம், மான், கோபுரம், இதிகாச கதாபாத்திரம், மாங்காய் என பலவிதமான கைவினையின் கைவண்ணத்தினால் உருவாக்கப்படுகிறது.

பட்டு

உயர்தர காஞ்சிப் பட்டுப்புடவை உருவாக்க 12 முதல் 20 நாள்கள் வரை ஆகும். புடவையின் வேலைப்பாடுகளுக்கேற்ப இது மாறுபடும். இந்த அழகிய புடவைகளின் தரத்தை, பட்டு முத்திரை (Silk Mark) கொண்டு உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

வேலைப்பாடு மற்றும் தரத்திற்கேற்ப காஞ்சிபுரம் பட்டுப்புடவைகள் சராசரியாக ரூ.7000 முதல், ரூ.1,50,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. காஞ்சிப் பட்டுப் புடவைக்கு, 2005-06ல் புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

தகவல்கள்: காஞ்சிபுரம் மாவட்ட பட்டுப்பூச்சி நிறுவன திட்ட இயக்குநர் ராமநாதன்.

பட்டு