Valparai: சில்லென்ற மலை; குளு குளு நீர்விழ்ச்சி; இளநீர்,மீன் வறுவலுக்கு ஆழியாறு; ஒரு ஜாலி ட்ரிப்!

மு.பூபாலன்

பொள்ளாச்சியிலிருந்து 60 கி.மீ. தொலைவில் மலைமேல் இருக்கும் அழகிய ஊர் வால்பாறை. வழியெங்கும் நீரோடைகள், நீர்வீழ்ச்சிகள், சூரியனுக்கே ஸ்வெட்டர் போடும் தேயிலைத் தோட்டங்கள், அணைகள், யானைகள், வரையாடுகள், அடர் வனங்கள் என பல அதிசயங்களுடன் வரவேற்கும் வால்பாறை.

ஆழியாறு அணை: வால்பாறை செல்லுவதற்கு முன் தொடக்கத்தில் வருவது ஆழியாறு அணை. பசும்புல் பூங்கா, குழந்தைகள் விளையாட சறுக்குப் பலகை, ஊஞ்சல், தூரி, பெரியவர்கள் அமர நிழல் இருக்கைகள், இனிக்கும் பொள்ளாச்சி இளநீர், இளம் நுங்கு, பதநீர், சுடசுட அணை மீன் வறுவல் என பொழுபோக்கிற்கான அனைத்து அம்சங்களும் இங்குண்டு.

அதன் பின் மலையேறத் தொடங்கினால், வளைந்து நெளிந்து செல்லும் 40 கொண்டை ஊசி வளைவுகள் நல்ல டிரைவிங் அனுபத்தைத் தரும். இதைக் கடந்த பின் ஓர் இடத்தில் நின்று கடந்து வந்த பாதையை திரும்பிப் பாருங்கள் அதன் ரம்மியமானக் காட்சியைப் பார்ப்பற்கு அவ்வளவு அழகாக இருக்கும்.

மங்கி பால்ஸ்: தடுப்புச் சுவர்களின் மேல் அமர்ந்திருக்கும் ஏராளமான குரங்குங்களின் ஆர்ப்பாட்டம், சிற்றோடைகளின் சங்கீதம், நீர்வீழ்ச்சியின் சத்தம் என இந்த இடத்தின் அருகில் வந்தாலே தெரிந்துவிடும் இது தான் மங்கி பால்ஸ் என்று. இந்த அருவி நீரில் சற்று நனைந்து ஈரம் காய வால்பாறை நோக்கி பயணிக்கலாம்.

வால்பாறைக்குச் செல்லும் சாலை எங்கும் தமிழ் நாட்டின் மாநில விலங்கான வரையாடுகள் சாலைகளில் துள்ளி விளையாடுவதை ரசித்துக்கொண்டே பயணிக்கலாம். மேற்குத்தொடர்ச்சி மலையில் மட்டுமே காணப்படும் அரிய விலங்கான இவ்விலங்கை இங்கு காணலாம்

பாலாஜி கோயில்: வால்பாறையைத் தொடும் முன்பாகவே பிரிந்து செல்லும் சாலை மார்க்கத்தில் 10 கி.மீ. பயணித்தால் வரும் அழகிய இடம் பாலாஜி கோயில். உயரமான இடத்தில் அமைத்துள்ளது இந்தக் கோயில்.

சின்னக்கல்லாறு நீர்வீழ்ச்சி: இந்த இடத்தில் வானம் எப்போதும் தூறல் போட்டுக்கொண்டே இருப்பதுபோலத் தோன்றும். அதில் நனைந்தவாறு கண்ணாடிபோல ஓடும் சின்னக்கல்லாறு நீர்வீழ்ச்சியின் தண்ணீரில் கால் நனைத்துக்கொண்டு சின்னக்கல்லாறு நீர்வீழ்ச்சியின் அழகை ரசிக்கலாம்.

கூழாங்கல் ஆறு: வால்பாறை நகரத்தை ஒட்டியுள்ள சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் குழந்தைபோல தவழ்ந்து ஓடும் ஆழம் குறைவான ஆறு இது. கூழாங்கற்களால் நிறைந்த இந்த ஆற்றில் விளையாடிக்கொண்டே அதைச் சுற்றியுள்ள தேயிலைத் தோட்டங்களைக் கண்டு ரசிக்கலாம்.

நல்லகாத்து காட்சி முனை: வால்பாறையில் இருந்து சில கி.மீ பயணித்தால் வருவது நல்லகாத்து எஸ்டேட். இந்தப் பகுதியில் இருக்கிறது நல்லகாத்து காட்சி முனை. இதன் உச்சியிலிருந்து பார்த்தால் கேரள மலைவாழ் மக்களின் குடியிருப்புகள், தூரத்தில் சுற்றித்திரியும் யானைக் கூட்டங்களையும் காணலாம்.

அக்கா மலைப் புல்வெளி: கண்ணுக்கெட்டிய தூரம் வரை விரிந்து கிடக்கும் புல்வெளியை ரசிக்காமல் இருந்துவிட முடியாது. யானைகள் மற்றும் காட்டு விலங்குகள் அதிகம் இருக்கும் பகுதி இது. இங்கு செல்ல வனத்துறையின் அனுமதி அவசியம்.

அணைகள்: வால்பாறையை சுற்றியுள்ள பகுதிகளில் சின்னக் கல்லாறு, அப்பர், காடாம்பாறை, ஆழியாறு, சோலையாறு, நீரார் போன்ற பல அணைகள் உள்ளன. இவையெல்லாம் வால்பாறையை சுற்றியும், போகும் வழியிலும் அமைந்துள்ளன.

டாப் ஸ்லிப்: பொள்ளாச்சியில் இருந்து 35 கி.மீ. தொலைவில் இருக்கிறது டாப் ஸ்லிப். அதாவது ஆழியாறு அணையிலிருந்து வால்பாறைக்கு ஒரு சாலையிலும், டாப்சிலிப்க்கு இன்னொரு சாலை வழியாகவும் செல்ல வேண்டும். யானை சவாரி, தங்குவதற்கு மரத்தினாலான வீடுகள், வன விலங்குகள் என பார்ப்பதற்கு ஏராளமானவை இங்குள்ளன.

வால்பாறையிலிருந்து திரும்பும்போது பொள்ளாச்சி வழியாகவும் கீழிறங்கலாம் அப்படியே கேரளா பக்கமும் செல்லலாம். கேரளா வழியாகச் சென்றால் பிரமாண்ட குட்டி நயாகரா போல் தண்ணீர் கொட்டும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியைக் காணலாம். ஆனால் இந்த வழியில் யானைகள் நடமாட்டம் அதிகம். கேரள வனத்துறையின் அனுமதி பெற்று சரியான நேரத்தில் செல்லவேண்டும்.