Weekend Trip: சிறுத்தை,கரடி 10 அடிக்கு பாம்பு! மிரட்டும் கோடந்தூர் காடு ஒரு விசிட்! | Photo Story

பிரபாகரன் சண்முகநாதன்

உடுமலைப்பேட்டையில் இருந்து மூணார் போகும் வழியில், இரண்டாவது செக்போஸ்ட்டில் இருந்து வலதுபுறம் திரும்பினால், கோடந்தூர் காடு வருகிறது.

சிறு சிறு ஓடைகள், அருவிகள், வழியெல்லாம் காடு என ரம்மியமான இந்த இடம் சுற்றுலா தலம் கிடையாது. முறையான அனுமதி இருந்தால்தான் கோடந்தூருக்குப் போக முடியும்

காட்டுக்குள்ளே இருக்கும் கட்டளை அம்மன் கோவில்தான் இங்கே மெயின் அட்ராக்ஷன். அம்மன் கோயில் லோக்கல் பக்தர்களுக்கு மட்டுமே இங்கே அனுமதி! மேலும், பக்தர்கள் அருவியில் குளிக்கவும் அனுமதி வாங்க வேண்டும்.

அருவி என்றதும், அதிரப்பள்ளி, குற்றாலம் மெயின் அருவிபோல் கற்பனை செய்தால் கம்பெனி பொறுப்பில்லை. ஆனால், செம ரம்மியமாக, சிக்கென விழுந்து கொண்டிருந்தது அருவி. கீழே பெரிய அகழி மாதிரி கெட்டிக் கிடந்தது. அதில்தான் குளியல்.

நீச்சல் தெரிந்தவர்கள் மட்டும் அருவியில் இறங்கலாம். அருவிக்கு மேலே ‘தத்தக்கா பித்தக்கா’ என்று செருப்புப் போடாமல் ஏறினால்… இன்னொரு உலகம் விரிகிறது.

கோடந்தூர் காட்டின் மொத்த அழகையும் பார்க்க வாட்ச் டவருக்கு போக வேண்டும். கதவுகள் கொண்ட படிக்கட்டுகள், காட்டு விலங்குகள் வாட்ச் டவரில் ஏறாமல் இருக்க அமைக்கப்பட்டிருக்கின்றன எனத் தெரிந்த போது ஆச்சரியமாக இருந்தது.

காட்டு யானைகளின் ஃப்ரெஷ்ஷான சாணங்கள் வழியில் தென்பட்டன. ``மிட் நைட்லாம் யானைங்க இங்கதான் குடியிருக்கும்ங்க! சிறுத்தை, கரடி எப்பவாச்சும் வருவாங்க'' என பீதி கிளப்பினர் உள்ளூர் வழிகாட்டிகள்.

இங்குள்ள ஒரே ஒரு சோலார் ரெஸார்ட்டில், அரசாங்க அனுமதியோடு வேண்டுமானால் தங்க முயற்சிக்கலாம். யானை, சிறுத்தை, பாம்பு, கரடி போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் மாலையானால் இங்கே அதிகமாக இருக்கும்.

இது காட்டுப்பகுதி என்பதால் மிகப் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் போன்றவற்றை கையோடு திருப்பி கொண்டு வந்துவிடுவது முக்கியம்.

மூணாறில் தங்க மறையூர் வழியாக செல்ல வேண்டும். செல்லும் வழியெல்லாம் அருவிகளின் தலையீடு. தூவானம் அருவி, சின்னார் வனச்சரகம், சந்தனக்காடு, டால்மென் முனியரா ஆகியவற்றை 10 கி.மீக்குள் சுற்றி பார்த்துவிட முடியும்.

2 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்த் தோட்டம் இருக்கும் காந்தலூர், வரையாடுகள் வதவதவெனத் திரியும் ராஜமலை, போட்டிங், ட்ரெக்கிங், ஜில் க்ளைமேட் அனுபவிக்க மூணாறு என சூப்பர் விசிட் அடிக்க இடங்கள் இங்கு ஏராளம் உண்டு.