காயமடைந்த காட்டு யானை; கும்கிகள் சூழ 2 மணி நேர சிகிச்சை... அசத்திய முதுமலை வனத்துறை!

சதீஸ் ராமசாமி

நீலகிரி மாவட்டம் முதுமலை பொக்காபுரம் வனப்பகுதியையொட்டியுள்ள பழங்குடி கிராமத்தைச் சுற்றி ஓர் ஆண் காட்டு யானை தொடர்ந்து உலவி வந்தது. யானையின் முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டிருப்பதைப் பார்த்த மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இந்த யானைக்கு ஏற்பட்டுள்ள காயத்தைக் குணமாக்க சிங்காரா வனத்துறையினர் பழங்களில் மாத்திரைகளை வைத்துக் கொடுத்து வந்தனர். ஆனாலும் காயம் குணமாகாமலே இருந்தது. இந்த நிலையில், யானைக்கு கூடுதல் சிகிச்சை தேவை என்பதால் மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்க வனத்துறை முடிவு செய்தனர்.

காயம்பட்ட யானை முதுமலை பொக்காபுரம் வனப்பகுதியில் இருப்பதை இன்று காலை 9 மணியளவில் கண்டறிந்தனர். சுஜய் மற்றும் வசிம் ஆகிய இரண்டு கும்கி யானைகளின் உதவியோடு வன கால்நடை மருத்துவ குழுவினர், காட்டு யானையை சுற்றி வளைத்து மயக்க ஊசி செலுத்தினர்.

லேசான மயக்கத்தில் இருந்த யானைக்கு குறிப்பிட்ட நேர இடைவெளியில் இரண்டாவது மயக்க ஊசி செலுத்தினர். அரை மயக்கத்தில் இருந்த காட்டு யானையின் அருகில் நெருங்கி கால்களில் ராட்சத கயிற்றைக் கட்டினர்.

கும்கி யானை மீது ஏறிய மருத்துவக் குழுவினர் காயத்துக்கு மருந்து பூசி சிகிச்சை அளித்தனர். 2 மணி நேர சிகிச்சைக்குப் பின்னர் யானையின் கால்களில் கயிற்றை அகற்றி வனத்தில் விடுவித்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர், ``இந்த யானை வேறு யானையுடன் சண்டையிட்டதிலோ, மரத்தில் மோதியோ இந்த காயம் ஏற்பட்டிருக்கலாம். காயம் சற்று ஆழமாக உள்ளதால் யானைக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்க வேண்டியுள்ளது. காயமடைந்த யானை கிராமப் பகுதிக்குள் வராமல் இருக்க தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்" என்றனர்.

காயத்துடன் அவதிப்பட்டு வந்த ஆண் காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து சிகிச்சையளித்த வனத்துறையின் செயல் உள்ளூர் மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.