மாடித் தோட்டம் செழிப்பா இருக்க இதையெல்லாம் பண்ணுங்க! | Visual Story

ஜெ.சரவணன்

ஒரே குடும்ப தாவரங்களை அருகருகில் நடவு செய்ய வேண்டாம். அப்படி இருந்தால் பூச்சி தாக்குதல் எளிதில் அடுத்தடுத்து உள்ள செடிகளுக்கும் விரைவில் பரவும்.

மாடித்தோட்டம்

தக்காளி, கத்திரிக்காய், மிளகாய் எல்லாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. இவற்றை நான்கடி இடைவெளி விட்டோ, அல்லது வேறு குடும்பத்தைச் சேர்ந்த தாவரம் அருகிலோ நடவு செய்யலாம்.

நம் நாட்டில் பெரும்பாலும் வெப்பமண்டல தாவரங்கள்தான் உள்ளன. அவற்றுக்கு நேரடியான சூரிய ஒளி தேவை. எனவே, நிழற்வலை அமைக்கத் தேவையில்லை.

`அப்படினா நிழற்வலை தேவையே இல்லையா?' தேவைதான். பூக்காத தாவரங்களுக்கு, அதாவது புதினா, கீரை வகைகள் போன்றவற்றுக்கு அமைத்துக்கொள்ளலாம். காய்கறிகளுக்கு நிழற்வலை அமைப்பது நல்லதல்ல.

கேரட், முட்டைக்கோஸ் மாதிரியான காய்கறிகளை மாடித்தோட்டத்தில் வளர்ப்பது சரியான முறையல்ல. காரணம் மாடியில் அவற்றுக்கு தேவையான குளிர்ச்சியை ஏற்படுத்த முடியாது.

தொட்டிகளில் மண் அதிகமாக நிரப்புவது நல்லதல்ல. மண்ணுக்குப் பதிலாக தென்னை நார் கழிவை பயன்படுத்தலாம். தென்னை நாரை இரண்டு முறை பயிர் செய்து முடித்த பின் மாற்ற வேண்டும்.

மாடியில் தொட்டிகள் வைப்பது கட்டடத்தை சேதப்படுத்தலாம் என்பதால், வீட்டின் தரைப்பகுதியில் மண் தொட்டியைப் பயன்படுத்தலாம். மாடித்தோட்டத்தில் பைகளை (Grow Bag) பயன்படுத்தலாம்.

ஒரு பையில் ஒரு செடிதான் வைக்க வேண்டும். அப்போதுதான் செடிக்கு சத்துகள் முழுமையாகக் கிடைக்கும். செடிகள் வளையாமல் நேராகச் செல்வதுபோல், அல்லது படர்ந்து குட்டி மரம் போல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

விதைகளை நேரடியாகத் தொட்டியில் நடவு செய்யக் கூடாது. அப்படியே நட்டாலும் நேரடியாக அதன் மீது வெயில் படாத வகையில் வைக்க வேண்டும்.

விதை முளைக்கும்வரை ஈரப்பதம் உலர்ந்துவிடாமல் பாத்துக்கொள்ள வேண்டும். நாட்டுவிதையை இரண்டு, மூன்று விதைகளாக நடவு செய்யலாம். விதை முளைத்த பின் நன்றாக வளர்ந்தவற்றை விட்டுவிட்டு மற்றவற்றை கிள்ளி விட வேண்டும்.