`காப்பாற்றப்பட வேண்டிய காட்டின் பேருயிர்கள்!' - யானைகள் தின சிறப்புப் பகிர்வு! #VisualStory

கே.அருண்

ஆண் யானை அதன் பருவ வயதை அடைந்ததும், கூட்டத்தில் இருக்கும் பெண் யானைகளுடன் உள் இனச்சேர்க்கையில் ஈடுபடுவதை தவிர்க்க, யானைக் கூட்டத்தில் இருந்து அவை விரட்டப்படுகின்றன. காரணம் உள் இனச்சேர்க்கையால் ஆரோகியமற்ற குட்டிகள் பிறப்பதை யானைகள் விரும்புவதில்லை.

elephant | கே. அருண்

பொதுவாக, காட்டில் வாழும் பெண் யானைகள் 9 வயதில் இருந்து 13 வயதிற்கு இடைப்பட்ட காலத்தில் முதல் முறையாக இனப்பெருக்கத்திற்கு தயாராகின்றன. அதன் துணையாக வேறொரு யானைக் கூட்டத்தில் இருந்து ஆரோக்கியத்திலும், எடையிலும், வயதிலும், உயரத்திலும் பொருத்தமான ஆண் யானையைத் தேர்வு செய்கின்றன.

elephant | கே. அருண்

இவ்வாறு ஆண் யானையைத் தேர்வு செய்வதன் மூலம், தனக்கு பிறக்கும் குட்டியின் ஆயுள் அதிகமாக இருக்கும் என அவை நம்புகின்றன. 630 முதல் 660 நாள்களில் குட்டி ஈனும் இந்தப் பெண் காட்டு யானைகளால் சுமார் 55 முதல் 60 வயதுவரை கருவுற முடியும்.

elephants | கே. அருண்

புதிதாகப் பிறக்கும் யானைக் குட்டியை, தாய் யானை கூட்டத்தில் இருக்கும் அனைத்து பெண் யானைகளும் இணைந்தே வளர்க்கின்றன. கூட்டத்தில் உள்ள பெண் யானைகளின் எண்ணிக்கை குட்டியின் பாதுகாப்பை உறுதி செய்து அதன் குழந்தைப் பருவத்தை கடக்க காரணமாக இருக்கிறது.

elephants | கே. அருண்

காடுகள் துண்டாடப்பட்டு, வலசை பாதைகள் அழிவதால் யானை - மனித எதிர்கொள்ளல் அதிகரித்து வருகின்றன.

elephant | கே. அருண்

சுமார் 50 கிலோமீட்டர் நடையில், நாள்தோறும் 300 கிலோ உணவு, 160 லிட்டர் தண்ணீர் அருந்தும் யானைகள், காடுகள் துண்டாடப்படுவதால் குறுகிய வனப்பகுதிக்குள் சிக்கித் தவிக்கின்றன.

elephants | கே. அருண்

துண்டாடப்பட்ட காடுகளில் மனிதர்களை எதிர்கொள்ளும் யானைகளை, கும்கி யானைகளின் உதவியுடன் வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்ட முயல்கின்றனர் அல்லது மயக்க ஊசி செலுத்தி அந்த யானைகள் முகாமிற்கு கொண்டுச் செல்கின்றனர்.

elephants | கே. அருண்

கும்கிகள் உதவியுடன் யானைகள் முகாமுக்கு கொண்டு வரப்படும் காட்டு யானைகள் க்ரால் எனப்படும் பிரம்மாண்டமான மரக்கூண்டில் அடைக்கப்படுகின்றன.

elephant | கே. அருண்

க்ராலுக்குள் அடைக்கப்படும் காட்டு யானை நகர முடியாதபடி ராட்சத மரங்களைக் கொண்டு க்ராலை இரண்டாக பிரிக்கின்றனர். மேலும் அந்த யானைகள் சில கட்டளைகளுக்குக் கீழ்படியும் வரை உணவு, தண்ணீர் என அனைத்துக்கும் ஏங்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றன.

elephant | கே. அருண்

அப்படி க்ராலில் இருந்து சில மாதங்கள் பயிற்சிக்குப் பிறகு, தன் இயல்பை மறந்து, புதிதாகப் பிறந்த குழந்தை தன் தந்தையின் கையைப் பிடித்து நடப்பதைப் போல பாகனின் குச்சியைப் பிடித்து நடக்கிறது அந்த யானை.

elephant | கே. அருண்

காட்டில் சுதந்திரமாக சுற்றிய இந்தக் கால்களில், சங்கிலிகள் எந்நேரமும் பிணைந்தே இருக்கின்றன, யானை முகாமில்.

elephant | கே. அருண்

இந்த முகாம்களில் சிறப்பாக யானைகள் பராமரிக்கப்பட்டாலும். இனப்பெருக்கம் என்பதற்கான வாய்ப்பு குறைவே.

elephant | கே. அருண்

ராஜாக்கள் காலத்தில் இந்தியாவில் மட்டும் லட்சக்கணக்கான யானைகள் காடுகளில் இருந்துள்ளன. அவற்றின் உயரம் சுமார் 12 முதல் 15 அடியும், ஆயுள் சுமார் 200 ஆண்டுகளாகவும் இருந்துள்ளன.

elephants | கே. அருண்

இப்போதுள்ள சூழலில் காடுகள் துண்டாடப்படுவதால் யானைக் கூட்டங்கள் இடம்பெயர்ந்து செல்லமுடியாமல் அதன் இயல்புக்கு மாறாக உள் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் யானைகளின் எடை, உயரம், இயல்பு என அனைத்திலும் மாபெரும் மாற்றம் ஏற்பட்டு அதன் ஆயுள் காலமும் வெகுவாக குறைந்துள்ளதாக வல்லுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

elephant | கே. அருண்