இ.நிவேதா
76-வது வயதில் காலடி எடுத்து வைத்துள்ளார், சோனியா காந்தி. அரசியலைத் தாண்டி, குடும்பத் தலைவியாக, மருமகளாக அவர் எப்படிப்பட்டவர், அவருடைய ரசனைகள் என்ன என்பதைத் தெரிந்து கொள்வோம்.
சோனியாவின் முழுப்பெயர், சோனியா மைனோ (Sonia Maino). 1946-ம் ஆண்டு, இத்தாலி நாட்டின் விஸன்ஸா என்ற சிறிய கிராமத்தில், ரோமன் கத்தோலிக்க குடும்பத்தில் அவர் பிறந்தார்.
1968 பிப்ரவரி 25-ம் தேதி ராஜீவ் காந்தியைக் கரம்பிடித்து, நேரு குடும்பத்தின் மருமகளாக இந்திய மண்ணில் கால் பதித்தார் சோனியா.
வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்வதில் அலாதி பிரியம் கொண்டவர். குறிப்பாக, வீட்டில் கட்சி மீட்டிங் நடப்பதாக இருந்தால், முன் தினமே வீட்டைச் சுத்தம் செய்து அலங்கரிப்பாராம்.
சோனியா நல்ல செஃப். கல்யாணமான புதிதில் குக்கரி புத்தகம் பார்த்துச் சமைக்க ஆரம்பித்தார். பின்னர், தன் மாமியாருக்குப் பிடித்த பாஸ்தா, கஜர்கா அல்வா வரை சமைக்கும் எக்ஸ்பர்ட் ஆகிவிட்டாராம்.
சோனியாவுக்கு, நாவல்கள் படிப்பது பிடித்த விஷயம். குறிப்பாக, இந்தி மற்றும் உருது எழுத்தாளர் முன்ஷி பிரேம்சந்த் நாவல்கள் என்றால் கொள்ளைப் பிரியம். சோனியா காந்திக்கு பிரெஞ்ச், ஜெர்மன் உள்ளிட்ட 9 மொழிகள் தெரியும்.
சோனியா திருமணத்தின்போது அணிந்திருந்த பிங்க் கலர் காட்டன் புடைவையைத்தான், அவர் மகள் பிரியங்காவும் திருமணத்தின்போது கட்டியிருந்தார். அந்தப் புடைவையை அந்தளவுக்குப் பத்திரமாக வைத்திருக்கக் காரணம், நேரு தன் கையால் நெய்தது.
டெல்லி உறைபனிக் காலத்தில் தென்னிந்தியாவின் காபி குடிப்பது சோனியாவுக்கு மிகவும் பிடிக்கும்.
நாள் தவறாமல் யோகா செய்வார் சோனியா காந்தி. ஓவிய ஆர்வமிக்க இவர், பெயின்டிங் கோர்ஸ் முடித்துள்ளார்.