நீலகிரி: அரை மயக்கத்தில் தப்பிய கொம்பன்... மூன்றாவது நாளாகத் தொடரும் ஆபரேஷன் புரோக்கன்‌ டஸ்கர்!

சதீஸ் ராமசாமி & கே.அருண்

நீலகிரியில் கடந்த 8 நாள்களில் 5 நபர்கள் யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த மாவட்டமும் பதற்றத்தில் உள்ளது.

பந்தலூர் கொளப்பள்ளி டேன்டீ பகுதியில் தந்தை மற்றும் மகனை ஒரே நாளில் தாக்கிக் கொன்ற காட்டு யானையைப் பிடிக்க வலியுறுத்தி அண்மையில் பந்தலூர் மக்கள் பெரும்‌ போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதையடுத்து குறிப்பிட்ட யானையைப் பிடிக்க முடிவு செய்த வனத்துறையினர், அந்த யானையை அடையாளம் கண்டு உறுதி செய்தனர்.

`உடைந்த கொம்பன்' என்ற பெயரில் அழைக்கப்படும் அந்த காட்டு யானையைப் பிடிக்க `ஆபரேஷன் புரோக்கன்‌ டஸ்கர்' என சிறப்புக் குழுவை உருவாக்கி இரண்டு நாள்களாகத் தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தத் தேடும் பணியில் 3 கும்கிகள், 3 கால்நடை மருத்துவக் குழுக்கள், வேட்டைத் தடுப்பு காவலர்கள் குழு மற்றும் ட்ரோன் கேமராக்கள் உதவியுடன் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டாவது நாளான நேற்று, உடைந்த கொம்பன் யானை செப்பந்தோடு வனப்பகுதியில் மற்ற யானைக் கூட்டத்துடன் இருப்பதை உறுதி செய்தனர். அதற்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியில் களமிறங்கி, மதியம் 2.30 மணியளவில் கால்நடை மருத்துவர்கள் யானைக்கு மயக்க மருந்து நிரப்பிய ஊசியைத் துப்பாக்கி மூலம் செலுத்தினர்.

உடலில் பாய்ந்த மயக்க ஊசியுடன் அச்சத்தில் தப்பித்து ஓடிய யானை, அடர் வனத்துக்குள் சென்று மறைந்தது. அரை மயக்கத்துடன் தப்பித்த யானையை ட்ரோன் உதவியுடன் மாலை வரை தேடினர். இருப்பினும் கண்டறிய முடியவில்லை.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் நம்மிடம் பேசுகையில், ``ஃபர்ஸ்ட் மயக்க டாட்ல யானை எஸ்கேப் ஆயிடுச்சு. ரெண்டாவது டாட் போட்டு பக்கத்துல நெருங்கலாம்னு ட்ரை பண்ணோம். முடியல. யானையைப் பிடிக்க நிலப்பரப்பும் சாதகமா இல்ல.

மேலும் கூட்டத்தோட இருப்பதால பக்கத்துல நெருங்கவே முடியல. யானையத் தொடர்ந்து கண்காணிச்சிட்டு இருக்கோம். சரியான இடத்துக்கு யானை மூவ் ஆனதும் பிடிக்க ஏற்பாடு செய்றோம்" எனத் தெரிவித்தார்.