`சங்கர் வந்துருக்கான்னா ஏரியாவே நடுங்கும்!' - `ஆபரேஷன் புரோக்கன்‌ டஸ்கர்' அனுபவங்கள்

சதீஸ் ராமசாமி & கே.அருண்

நம் நாட்டில் யானை - மனித எதிர்கொள்ளல் அதிகம் நிகழும் இடங்களில் ஒன்றாக நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டம் இருந்து வருகிறது. மனித தவறுகளால் யானைகள் இறப்பதும் யானை தாக்கி மக்கள் உயிரிழப்பதும் இங்கு இயல்பான ஒன்றாக மாறி வருகிறது.

கூடலூர் வனக்கோட்டத்தில் நடப்பு ஆண்டில் மட்டும் 8 நபர்கள் யானை தாக்குதல் நிகழ்வுகளில் உயிரிழந்துள்ளனர். 7 பேர் காயமடைந்துள்ளனர். இதேபோல்‌ மின்சாரம் பாய்ந்தும் உடலில் காயம் ஏற்பட்டும்‌ யானைகளும் உயிரிழந்துள்ளன.

கூடலூரில் வாழ்ந்து வரும் பழங்குடிகள், தோட்ட தொழிலாளர்கள், வனத்துறையின் முன் களப்பணியாளர்கள் ஆகியோர் ஒவ்வொரு நாளும்‌ யானைகளை‌ எதிர்கொள்கின்றனர். அதிகரிக்கும் ஆக்கிரமிப்பால் வாழிடத்தையும் வழித்தடத்தையும்‌ நீர்நிலைகளையும்‌ இழந்து தவிக்கும் அப்பாவி யானைகளும் தினமும் மனிதர்களை‌ பயத்துடனும் பதற்றத்துடனும் எதிர்கொள்கின்றன.

நாள்தோறும் காட்டு யானைகளை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதால், ஒவ்வொரு யானையையும் இவர்கள் நன்கு அறிந்துள்ளனர். அவற்றின் உடல்வாகு, தந்த அமைப்பு, காதுகளின் வடிவம் உள்ளிட்டவற்றைப் பொறுத்து காட்டு யானைகளுக்கு பெயர்‌ சூட்டியும் அழைக்கின்றனர்.

மூன்று நபர்களை தாக்கிக் கொன்ற `உடைந்த கொம்பன்' அல்லது சங்கர் என்ற காட்டு யானையைப் பிடிக்க `ஆபரேஷன் புரோக்கன்‌ டஸ்கர்' என்ற பெயரில் நமது வனத்துறையினர், தமிழக - கேரள எல்லையோரக் காடுகளில் தேடி வரும் நிலையில், இவர்களுடன் நாமும் இணைந்துகொண்டோம். தேடுதல் களத்தில் இந்த யானை குறித்து வனத்துறையின் களப்பணியாளர்களும் உள்ளூர் மக்களும் பேசிக்கொண்ட செய்திகள் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தின.

கோட்டமலை வனத்தை ஒட்டிய பகுதிகளில் இந்த யானையின் நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமராக்களைப் பொருத்திக் கொண்டிருந்த ஃபாரஸ்ட் கார்ட் ஒருவர், ``இந்த ஏரியாலயே சுமார் ஒரு எம்பது யானைங்க இருக்கும்; அவ்ளோதான். மத்ததெல்லாம் வெளிய இருந்து அப்பப்போ வந்துட்டு போறதுங்குதான். எப்படியும் அத்தன ‌யானையும் எங்களுக்கு அடையாளம் தெரியும். ஒவ்வொன்னுக்கும் ஒரு பேரு இருக்கு.

பேர சொன்னாலே அதோட சுபாவத்தைத் தெரிஞ்சிக்கலாம். சுள்ளிக் கொம்பன், ஒத்தக் கொம்பன், சாப்பாட்டு ராமன் என பல பேரு இருக்கு. இப்ப நாம‌ தேடிக்கிட்டு இருக்குற சங்கர் யானைக்கு ஒரு முப்பது வயசு இருக்கும். நல்ல ஹைட் வெயிட்டா இருக்கும். கோட்டமலை வழியா நம்ம ஏரியாவுக்கும் கேரளாவுக்கும் போயிட்டு வந்துட்டு இருக்கும். ஆறேழு வருசத்துக்கு முன்னாடி வர பெருசா குறும்பு பண்ணாது. சமீப வருசமா ரொம்ப ஆக்ரோஷமா இருக்கான்.

நல்ல அழகான கொம்பு இருந்துச்சி (யானையின் தந்தத்தை குறிப்பிடுகிறார்). 2015-ம் வருஷம் மத்த யானைகூட சண்ட போட்டதுல இதோட ஒரு கொம்பு ஒடஞ்சிருச்சி. காட்டுல கெடந்த ஒடஞ்ச கொம்ப சங்கர் என்கிற வேட்டைத்தடுப்பு காவலர் எடுத்தார். அவரோட பெயரையே இந்த யானைக்கு வச்சிட்டோம். அதுல இருந்து இதுக்கு பேரே சங்கர்னு ஆகிடிச்சி. சிலபேர் உடைஞ்ச கொம்புனு சொல்லுவாங்க. இத வெரட்டும்போது நாங்களே ரொம்ப கவனமா இருப்போம்" எனப் பல நிகழ்வுகளை நம்மிடம் சொல்லிக்கொண்டே வந்தார்.

செப்பந்தோடு பகுதியில் குறுமிளகு பறித்துக்கொண்டு இருந்த முதியவர் ஒருவர் பகிர்கையில், ``ஆறேழு வருசத்துக்கு முன்னாடி அது பாட்டுக்கு வரும் போகும். எந்த தொந்தரவும் இருக்காது. இடையில அதுக்கு நடந்த தொந்தரவுல ஏதோ பெருசா பாதிப்பு ஆகியிருக்கும் போல. ஆளே மாறிடுச்சு.

இந்தப் பக்கம் வந்தா கண்டிப்பா ஆள அடிக்கும். வீட்ட ஒடைக்கும். மரத்தைப் பேக்கும். எதுவுமே கெடைக்கலனா மத்த யானையவாச்சும் சண்ட போட்டு அடிக்கும். அவ்வளவு ஆக்ரோஷமா இருக்கும். சங்கர் வந்துருக்கான்னு சொன்னா ஏரியாவே பயந்து நடுங்கும்'' எனச் சொல்லி முடித்துவிட்டு மிளகுப் பையுடன் கிளம்பினார்.

துப்பாக்கி மூலம் கால்நடை மருத்துவர்கள் செலுத்திய மயக்க ஊசியால் அரை மயக்கத்துடன் தப்பிய சங்கரை செப்பந்தோடு அடர் காட்டுக்குள் தேடும் பொருட்டு நடந்து கொண்டிருக்கையில் பேசிய மற்றொரு ஃபாரஸ்ட் கார்ட், ``இந்த யானைய எனக்கு 5 வருசமா தெரியும்‌ சார். நூறு யானை நடந்தாலும் சங்கரோட கால்தடம் எனக்கு தனியா தெரியும்.

அத வச்சே இவன் எங்க போயிருக்கானு கண்டுபிடிப்பேன். மத்த யானைங்கள விட இவனோட அடிக்கால் அவ்வளோ சொறசொறப்பா இருக்கும். இவன புடிக்கப்போறத நெனச்சா வருத்தமாதான் இருக்கு. ஆனா வேற வழி இல்ல தம்பி. ஒவ்வொரு ஆறு மாசத்துக்கும் வந்து ஆள அடிக்கும். இது இன்னும் பிரச்சனைய அதிகமாக்கும்" என மெல்லிய குரலில் சொன்னார்.

பேராசையாலும் சுயநலத்தாலும் யானைகளின் வாழிடத்தில் ஒரு‌ சிலர் செய்யும் அத்துமீறல்களால் அப்பாவி மக்களும் யானைகளும் படும் வேதனைகளை நினைத்து புலம்பிக் கொண்டே `பேஸ் கேம்பு'க்குத் திரும்பினோம்.