கொழுப்புக்கட்டியை அகற்றியே தீர வேண்டுமா? | #Visual Story

கி.ச.திலீபன்

உடலின் சில பகுதிகளில் அளவில் சிறியதும், சற்று பெரியதுமாக எந்தத் தொந்தரவும் கொடுக்காமல் இருக்கும் கட்டியை கொழுப்புக்கட்டி என்று கூறுகிறோம். இதனை மருத்துவபூர்வமாக Lipoma என்றழைக்கின்றனர்.

இந்தக் கொழுப்புக் கட்டிகள் உடலில் ஏன் ஏற்படுகின்றன என்பதற்கான பிரத்யேக காரணங்கள் எதுவுமில்லை. மரபு ரீதியாகவும் இக்கொழுப்புக்கட்டிகள் ஏற்படுகின்றன. மற்றபடி யாருக்கு வேண்டுமானாலும் இக்கட்டிகள் வரலாம்.

கொழுப்புக்கட்டி 2 செ.மீ அளவில் வலியின்றி எந்தத் தொந்தரவும் கொடுக்காமல் இருந்தால் அகற்றத் தேவையில்லை. ஏதேனும் ஒரு விதத்தில் இடையூறோ, வலியையோ ஏற்படுத்தினால் அகற்றியே தீர வேண்டும்.

மருத்துவப் பரிசோதனை மூலமாக கொழுப்புக்கட்டியா என்பதை உறுதிப்படுத்துவது அவசியம். அளவில் பெரியதாக சந்தேகத்துக்குரிய கட்டியாக இருக்கும் பட்சத்தில், ஸ்கேன் செய்து கண்டறிய வேண்டிய தேவை ஏற்படலாம்.

இந்தக் கட்டி உடலின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வரலாம். கழுத்து, தோள்பட்டை, வயிறு மற்றும் தொடைப்பகுதியில்தான் பெரும்பாலாக இக்கட்டி ஏற்படுகிறது. நரம்பு மண்டலத்தில் இக்கட்டி வளர்வதெல்லம் மிகவும் அரிது.

கொழுப்புக்கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்ற முடியுமே தவிர கரைக்க முடியாது. இந்தக்கட்டி நாளடைவில் பெரிதாகலாமே தவிர சிறியதாகாது. அளவில் பெரிய கட்டிகள் புற்றுநோய்க்கட்டியாக மாறுவதற்கும் வாய்ப்பிருக்கிறது என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

மரத்துப்போகிற ஊசி போட்டு கொழுப்புக்கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி விடலாம். இதுவே பெரிய கட்டி என்றால் முழு மயக்கத்தை ஏற்படுத்தி பெரிய அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.