`இதுவும் கடந்து போகும்!' நெருக்கமானவர்களின் இழப்பிலிருந்து மீள்வது எப்படி? #VisualStory

இ.நிவேதா

இறப்பு யாராலும் ஈடுகட்ட முடியாத இழப்பு. திருமணங்களுக்குப் போவதைவிட, ``ஒரு மனிதனின் இறப்புக்கு அவசியம் போ" என்றே சொல்வர். திருமணத்தில் ஒரு மனிதன் வாழ ஆரம்பிக்கிறான். இறப்பில் தன் பயணத்தை நிறுத்திக் கொள்கிறான்.

இறந்தவர் மிகவும் இறுக்கமான சூழ்நிலையைப் பிடித்தவர்களுக்குப் பரிசாக விட்டுச் செல்கிறார். அந்த நினைவுகளிலிருந்து விடுபட்டு வெளிவருவது அவ்வளவு எளிதல்ல...

இழப்பை சந்தித்தவர்கள் பெரும் வருத்தத்தில் இருப்பர். அவர்கள் தங்கள் சகஜ நிலைக்குத் திரும்ப சில வாரங்கள், ஏன் வருடங்கள் கூட ஆகலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் மறுப்பு, கோபம், வாக்குவாதம், மனஅழுத்தம், ஏற்றுக் கொள்ளுதல் என ஐந்து நிலைகளைக் கடந்தே உண்மையை ஏற்றுக்கொள்கிறார்கள்.

1. மறுப்பு: இறப்பின் செய்தியைக் கேட்டதும் அதை ஏற்றுக்கொள்ளும் மனம் இருக்காது. இனிமேல் அவர்கள் இல்லாத வாழ்க்கையை எப்படி கடக்கப்போகிறேன் என்ற விரக்தி நிலையே இருக்கும். நினைவலைகள் தொடர உணர்வற்று வருத்தத்தில் மூழ்கியிருப்பர்.

2. கோபம்: இழப்பின் வலியை உணர ஆம்பித்தவர்கள், விரக்தியடைவர். இந்த உணர்வே கோபமாக மாறும். இந்தக் கோபம் காரணமே இல்லாமல் இருக்கும்.

நண்பர்கள் மீதும், குடும்பத்தினர் மீதும் எரிச்சல் அடைவர். கடவுள் நம்பிக்கை இழந்து வசைபாடத் தொடங்குவர். அதீத கோபத்தில் தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ளும் அபாயமும் உள்ளது.

3. வாக்குவாதம்: ஏன் இப்படி நடந்தது, எதனால் நடந்தது எனப் புலம்புவர். இறப்பை நாம் தடுத்திருக்கலாம் என தங்களைத் தாங்களே குறை சொல்லிக்கொள்வர்.

4. மனஅழுத்தம்: பல கேள்விகள், குழப்பங்களுக்குப் பின்னால் மனம் வெறுமை அடையும். இந்த வெறுமை உணர்வால் மன அழுத்தத்துக்கு ஆளாவர். தனிமையிலேயே நேரத்தைச் செலவிடுவர். தூக்கமில்லாமல் தவிப்பர். பசியின்மை போன்ற அறிகுறிகள் தென்படும்.

5. ஏற்றுக்கொள்ளுதல்: இதுவே இறுதி நிலை. நாம் அன்பு வைத்த ஒருவர் உடல் அளவில் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார் என்ற உண்மையை மனம் ஏற்கும். இதுவே யதார்த்தம் என உணர்ந்து வாழ்க்கையில் முன்னே நகர்ந்து செல்லத் தொடங்குவர்.

துன்பத்திலிருந்து விடுபட சில வழிகள்: தனிமையை விடுத்து பிடித்தவர்களுடன் மனம் விட்டுப் பேசுங்கள். உங்களுக்காக சிறிது நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுங்கள்.

உடல் நலனில் அக்கறை கொள்ளுங்கள். இயல்பு நிலைக்குத் திரும்புங்கள். இது சந்தோஷத்தைக் கொடுக்கும். பிடித்தமான விஷயங்களில் ஈடுபடுங்கள்.

துன்பத்தை மறக்க மது அருந்தாதீர்கள். இது கவலையை இன்னும் அதிகப்படுத்தும். துக்கமான சூழ்நிலையில் எந்த முடிவையும் எடுக்க வேண்டாம்.

Drinks | Image by 3D Animation Production Company from Pixabay