இந்தோனேசியா நிலநடுக்கம்: 162 பேர் பலி, 700-க்கும் மேற்பட்டோர் படுகாயம்! | VISUAL STORY

VM மன்சூர் கைரி

இந்தோனேசியாவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில், 5.6 ரிக்டர் அளவில் பதிவாகியிருக்கும் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், நகரின் பல்வேறு கட்டடங்கள் இடிந்து விழுந்தன.

மேற்கு ஜாவாவிலுள்ள சியாஞ்சூர் நகருக்கு அருகில் இருக்கும் இந்தப் பகுதியில் 2.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.

இந்த நிலநடுக்க அதிர்வை மேற்கு ஜாவாவிலிருந்து 178 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் தலைநகர் ஜாகர்த்தா (Jakarta) வரை மக்கள் உணர்ந்திருக்கின்றனர்.

மேற்கு ஜாவா கவர்னர் ரித்வான் கமில் நிலநடுக்கத்தால் சுமார் 162 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 700-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலநடுக்கத்தில் 2,200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும், 5,300-க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்திருப்பதாகவும் The National Disaster Management Agency தெரிவித்திருக்கிறது.

பல கட்டடங்கள் இடிந்து விழுந்திருக்கும் நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

பெரும்பாலானோர் இன்னும் மீட்கப்படாமல் கட்டட இடிபாடுகளில் சிக்கியிருக்கின்றனர். அவர்களை மீட்புக் குழுவினர் தேடிவருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு சாலையோரங்களிலேயே முதலுதவி உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டுவருகின்றன.

2004-ம் ஆண்டில், வடக்கு இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் 9.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்தான் 14 நாடுகளைத் தாக்கிய சுனாமியாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.