விடுமுறை நாள்களில் வாசிக்க பில் கேட்ஸ் பரிந்துரைக்கும் 5 புத்தகங்கள்!|Visual Story

நந்தினி.ரா

உலகம் முழுவதும் அறியப்படுகின்ற செல்வாக்கு மிக்க  நபர்களில் ஒருவர்தான் அமெரிக்காவைச் சேர்ந்த 67 வயதுடைய பில் கேட்ஸ். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பை முடிக்காமல் பாதியிலேயே நிறுத்தியவர்.

மைக்ரோசாப்ட் மூலம் பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியாகியுள்ள பில் கேட்ஸ்  தற்போது உலகப் பணக்காரர்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார். இவர் தொழிலில் கவனம் செலுத்துவது மட்டுமின்றி, `பில் அன்ட் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன்’ என்ற அறக்கட்டளையை  நிறுவி  சமூக சேவையிலும் ஈடுப்பட்டு வருகிறார்.

தொழில் ரீதியாகப் எப்போதும் பில் கேட்ஸ் பரப்பரப்பாக இருந்தாலும்கூட அவர் தவறாமல் ஈடுபடும் விஷயங்களில் ஒன்று புத்தக வாசிப்பு. அந்த வகையில் அவர் விடுமுறை நாட்களில் வாசிக்க  5 புத்தகங்களைப்  பரிந்துரைக்கிறார். 

அப்படி, பில் கேட்ஸ் விரும்பிப் படித்த மற்றும் விடுமுறை நாட்களில் வாசிக்கப் பரிந்துரைத்த  5 புத்தகங்கள் இவைதான்.

அவர் முதலில் பரிந்துரைக்கும் புத்தகம் Stranger in a Strange Land . பில் கேட்ஸ், இளமையாக இருக்கும் காலத்தில் இப்புத்தகத்தை படித்திருக்கிறார். அவருக்கு மிகவும் பிடித்த அறிவியல் புத்தகம் என்றால் அது  Stranger in a Strange Land - தானாம்.

இதனை Robert Heinlein எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகத்தை `வளர்ந்த அறிவியல் புனைகதைக்கான சிறந்த அறிமுகம்' என்றும் கூறியிருக்கிறார்.

இரண்டாவதாக பில் கேட்ஸ், கூறும் புத்தகம் surrender. இப்புத்தகத்தை Bono என்ற எழுத்தாளர் எழுதியிருக்கிறார். "இந்தப் புத்தகம் படிப்பதற்கு மிகவும் நகைச்சுவையாக இருக்கும். அப்புத்தகத்தில் Bono குறிப்பிட்ட  சில விஷயங்கள் எனக்குப் புதிதாக இருந்தது" என்று பில் கேட்ஸ் குறிப்பிட்டிருக்கிறார்.

மூன்றாவதாக, Team of Rivals என்ற புத்தகத்தை அவர் பரிந்துரைக்கிறார். இதனை Doris Kearns Goodwin எழுதியிருக்கிறார்.  ஆபிரகாம் லிங்கன் மற்றும் அவரின் அரசியல் நிபுணத்துவம் குறித்த இந்தப் புத்தகம் புலிட்சர் பரிசை வென்றிருக்கிறது.

வன்முறை கிளர்ச்சி, இனம் தொடர்பான கேள்விகள், ஆழமான கருத்தியல் பிளவுகள் உடைய இப்புத்தகத்தை அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் என்று பில் கேட்ஸ் கூறுகிறார்.

அடுத்த புத்தகம் The inner game of tennis. இந்த புத்தகத்தை Robert Gallwey  எழுதியிருக்கிறார். "டென்னிஸ் வீரர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது என்றும், டென்னிஸ் விளையாடாதவர்கள் கூட இப்புத்தகத்தை படித்தால் இதிலிருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொள்வார்கள் என்று நான் நினைக்கிறேன்" என சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

ஐந்தாவதாக  அவர் பரிந்துரைக்கும் புத்தகம் Paul Strathern எழுதிய Mendeleyev’s Dream. "Paul Strathern எழுதிய மிகச்சிறந்த புத்தகம் இது. இரண்டரை ஆயிரம் ஆண்டுகால அறிவியல் கண்டுபிடிப்பின் உச்சத்தை இப்புத்தகம் எடுத்துரைக்கிறது" என்று பில் கேட்ஸ் குறிப்பிடுகிறார்.