க.ஶ்ரீநிதி
அமேசான் நிறுவனம் 18,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவிருப்பதாகக் கூறப்படுகிறது. நிலையற்ற பொருளாதாரச் சூழ்நிலையால் இந்த முடிவை எடுத்திருப்பதாக அந்த நிறுவனம் விளக்கமளித்திருக்கிறது.
ரஷ்யா உடனான போரில் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க பிரான்ஸ் அரசுத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
சோமாலியாவில் வெடிகுண்டு தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உட்பட 35 பேர் கொல்லப்பட்டனர்.
ட்விட்டர் நிறுவனம் 2019-ல் அரசியல் தொடர்பான விளம்பரங்களுக்கு விதித்திருந்த தடையை நீக்கத் திட்டமிட்டிருக்கிறது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் புயல் மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை காரணமாக அவசரநிலை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சீனா கொரோனா பாதிப்புகள், இறப்பு எண்ணிக்கையைக் குறைத்துக்காட்டுவதாக உலக சுகாதார அமைப்பு கண்டனம் தெரிவித்திருக்கிறது.
பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்க, மால் மற்றும் சந்தைகள் இரவு 8:30 மணி வரை மட்டும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா இடையே பேச்சுவார்த்தை இந்த மாதத்தில் நடைபெறவிருக்கிறது.
அமெரிக்காவில் கொலைக் குற்றவாளி ஒருவர் கழிவறைக்குச் செல்வதற்காக, விமான நிலையத்திலிருந்த அனைத்துப் பயணிகளையும் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக அதிகாரிகள் வெளியேற்றியிருக்கின்றனர்.
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பொருளாதாரத்தை மீட்டெடுக்க, பணவீக்கத்தைப் பாதியாகக் குறைப்பது, பொருளாதாரத்தை விரிவுபடுத்துவது, கடன்களைக் குறைப்பது உள்ளிட்ட 5 வாக்குறுதிகளை அளித்திருக்கிறார்.
2022-ம் நிதியாண்டில் 1.25 லட்சம் இந்திய மாணவர்களுக்கு விசா வழங்கி அமெரிக்கா சாதனை படைத்திருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்திருக்கிறார்.