க.ஶ்ரீநிதி
ஆப்கானிஸ்தானில் திருட்டு, பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதற்காக நான்கு பேரின் கைகளைப் பொதுமக்கள் முன்னிலையில் துண்டித்தனர் தாலிபன்கள்.
இந்தோனேசியாவின் சுலவேஸி பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6-ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் பெரிய சேதங்கள் இல்லை எனத் தகவல்.
உலகின் மிகவும் வயதான கன்னியாஸ்திரீயான லுசைல் ராண்டன் (Lucile Randon) காலமானார். பிரெஞ்சு கன்னியாஸ்திரீயான இவர், வயது முதிர்வு காரணமாக தனது 118-வது வயதில் நேற்று காலமானார்.
இந்தியா, சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமைந்ததாக இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார்.
காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் கைதுசெய்யப்பட்டார். ஜெர்மனியில் கிராமங்களை அழித்து சுரங்கம் அமைக்கப்படுவதை எதிர்த்து போராட்டம் செய்ததால் அவர் கைதுசெய்யப்பட்டார்.
நார்வே நாட்டில் உலகின் மிகவும் பழைமையான பண்டைய ஜெர்மானிய இனத்தவரின் வரிவடிவ எழுத்துகள் பொறிக்கப்பட்ட படிவங்கள் தொல்லியல்துறை வல்லுநர்களால் கண்டுபிடிப்பு.
அமெரிக்காவில், அதிபர் ஜோ பைடனும், நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டேவும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உக்ரைன் ரஷ்யா போர் குறித்தும் பேசப்பட்டது.
கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற நட்சத்திரங்கள் பலருக்கும், தற்போது கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை இன்று முதல் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்.
இந்தியாவுடனான மூன்று போர்களுக்குப் பிறகு பாகிஸ்தான் பாடம் கற்றுக்கொண்டிருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் தெரிவித்திருக்கிறார்.
உக்ரைன்-ரஷ்யா போரில் இறந்த பொதுமக்களின் எண்ணிக்கை 7,000 என ஐ.நா தகவல் தெரிவித்திருக்கிறது. இதில் 2,784 ஆண்களும், 1,875 பெண்களும், பாலினம் உறுதிசெய்ய முடியாமல் 1,939 பேரும், 398 குழந்தைகளும் அடங்குவர்.
புகழ்பெற்ற இத்தாலியத் திரைத்துறை பிரபலம் ஜினா லொல்லோபிரிகிடா, 95 வயதில் காலமானார்.
இத்தாலியில் தேடப்பட்டுவந்த பிரபல மாஃபியா தலைவன் மேட்டியோ மெஸ்ஸினா டெனாரோ 30 ஆண்டுகளுக்குப் பிறகு கைதுசெய்யப்பட்டார்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா பகுதியிலுள்ள ஒரு வீட்டில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஆறு மாதக் குழந்தை உட்பட ஆறு பேர் பலி.
அடுத்தடுத்து ஏற்பட்ட தவறுகளால் ஜெர்மனியின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கிறிஸ்டைன் லாம்பிரெக்ட் (Christine Lambrecht) தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.
உலகின் குளிர் மிகுந்த நகரமான செர்பியா நாட்டின் யாகுட்ஸ்க் பகுதியில் மைனஸ் வெப்பநிலை 50 டிகிரி செல்ஷியஸ் என்ற அளவில் பதிவாகியிருக்கிறது.