க.ஶ்ரீநிதி
தென் கொரியாவின் சியோல் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் பல வீடுகள் எரிந்து நாசமாகின. இந்த விபத்தால் சுமார் 500 பேர் அங்கிருந்து மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.
இருபது ஆண்டுகளாக நெட்ஃபிளிக்ஸின் இணை நிறுவனராக இருந்துவந்த ரீட் ஹாஸ்டிங்ஸ் (Reed Hastings) பதவி விலகினார்.
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், கார் பயணத்தின்போது சீட் அணியாமல் இருந்ததற்கு, மன்னிப்புக் கூறியிருக்கிறார்.
கரீபியன் தீவு அருகே கடலில் தொலைந்த 47 வயதான எல்விஸ் ஃப்ரான்கோய்ஸ் (Elvis Francois) என்பவர் 24 நாள்களுக்குப் பிறகு மீட்கப்பட்டிருக்கிறார்.
பிரேசில் அதிபர் லூலா டா சில்வா, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிப்ரவரி 10-ம் தேதி சந்திக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், ரஷ்ய எரிசக்தித்துறை அமைச்சரைச் சந்தித்தார். பாகிஸ்தானுக்கு எரிவாயு வழங்குவது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடந்தது.
அமெரிக்காவின் பழம்பெரும் இசைக்கலைஞர் டேவிட் க்ராஸ்பி (David Crosby) காலமானார். அவருக்கு வயது 81.
பெரு நாட்டில் போராட்டங்கள் அதிகரித்துவரும் நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் அதன் தலைநகரான லீமாவில் குவிந்திருக்கின்றனர். இந்தப் போராட்டத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்திருப்பதால், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
உக்ரைனில் பொதுமக்கள் 45 பேர் கொல்லப்பட்டதைக் கண்டித்து கனடா அரசு, ரஷ்யத் தூதருக்குச் சம்மன் அனுப்பியிருக்கிறது.
திபெத்தில் கடும் பனிச்சரிவில் சிக்கி இதுவரை 13 பேர் உயிரிழந்திருக்கின்றனர். சிக்கியவர்களை மீட்கும் பணி மேலும் தொடர்வதால், பலி எண்ணிக்கை உயர வாய்ப்பிருப்பதாக மக்கள் அச்சமடைந்திருக்கின்றனர்.