க.ஶ்ரீநிதி
டிக் டாக் அதிக ஆபத்து நிறைந்த செயலியாக இருப்பதாகக் கூறியிருக்கும் அமெரிக்கா, அதை அரசு தொடர்பான சாதனங்களில் பயன்படுத்துவதற்குத் தடைவிதித்திருக்கிறது.
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், அடுத்த ஆண்டுக்கான ராணுவம் தொடர்பான இலக்குகளை வகுத்திருக்கிறார். இந்த ஆண்டைப்போலவே அதிகப்படியான அணு ஆயுத சோதனைகள் நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தால், மக்கள் தவித்துவருகின்றனர். இதுவரை வெள்ளத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மாயமான 23 பேரைத் தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டிருக்கின்றனர்.
தாலிபன்கள் பெண்களை பள்ளிகள், பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கவிடாமல் செய்வது, மனித உரிமைகள், அடிப்படை உரிமைகளைத் தேயச் செய்யும் செயல் என அமெரிக்காவின் பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்திருக்கிறது.
ஜனவரி முதல் மாதத்துக்கு ஒரு முறை மட்டுமே கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களை வெளியிடப்போவதாக சீனா அறிவித்திருக்கிறது.
2020-ல் அமெரிக்காவின் மிச்சிகன் கவர்னர் க்ரெட்சன் விட்மரை (Gretchen Whitmer) கடத்த சதித் திட்டம் தீட்டிய இருவரில், ஒருவருக்கு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
தெற்கு சூடானில், நுயெர், முர்லெ ஆகிய இரண்டு உள்ளூர் குழுக்களுக்கு இடையே நான்கு நாள்களாகத் தொடர்ந்துவரும் மோதலில், இதுவரை 56 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல்.
அமெரிக்காவில் பனிப்புயலில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை அரசு தீவிரப்படுத்தியிருகிறது. இதுவரை இந்தப் புயலில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை ஐம்பதைக் கடந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆப்கானிஸ்தானில் நேரலைத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காபுல் பேராசிரியர் ஒருவர், ``எனக்கு இனி பட்டங்கள் தேவையில்லை. ஏனெனில், இந்த நாட்டில் கல்விக்கு இடமில்லை. என்னுடைய தங்கை, தாய் படிக்க முடியாதென்றால், எனக்கு இனி கல்வி தேவையில்லை" எனக் கூறும் வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.
உலகின் அதிக மக்கள்தொகைகொண்ட நகரங்களில் ஒன்று பங்களாதேஷின் தலைநகரம் டாக்கா. இங்கு முதன்முதலாக மெட்ரோ ரயில் சேவை தொடங்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தத் திட்டம் ஜப்பான் உதவியுடன் செயல்படத்தப்படவிருக்கிறது.
கடும் பனி காரணமாக சீனத் தலைநகரிலுள்ள பாலத்தில் 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.