நெருங்கும் சட்டமன்ற தேர்தல்... தேர்தல் ஆணையம் வைத்திருக்கும் திட்டங்கள் என்னென்ன?

ம.காசி விஸ்வநாதன்

அடுத்த தமிழகச் சட்டமன்ற தேர்தல் தொடங்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ஆரம்பக்கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது இந்தியத் தேர்தல் ஆணையம்.

கடந்த இரண்டு நாட்களாக அரசியல் கட்சிகள், அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தியது இந்தியத் தேர்தல் ஆணையம்.

அதற்குப் பின் பேசிய தேர்தல் ஆணையத்தின் பொதுச் செயலாளர் உமேஷ் சின்ஹா, "இந்த பெருந்தொற்றுக்கு நடுவே மிகவும் பாதுகாப்பாகத் தேர்தல் நடத்த என்ன நடவடிக்கையெல்லாம் எடுக்க வேண்டுமோ அனைத்தும் எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

"கொரோனா காலகட்டத்தில் பொதுத் தேர்தல்கள், இடைத்தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறோம். 6 மாதங்களுக்கு முன்பே தமிழகச் சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகளைத் தொடங்கிவிட்டோம்" என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இந்த தேர்தலுக்காகத் தேர்தல் ஆணையம் வைத்திருக்கும் திட்டங்களையும் அவர் பட்டியலிட்டார்.

மின்னணு ஓட்டு இயந்திரங்கள், VVPAT இயந்திரங்களை தயார்ப்படுத்தும் பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. ஜனவரி மாதத்திற்குள் இந்த பணிகள் நிறைவடையும். இதுபற்றிய தகவல்கள் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும்.

தேர்தல் வெயில் காலத்தில் நடக்க இருப்பதால் கூடார வசதி, மருத்துவ வசதிகள், ஆம்புலன்ஸ் போன்றவை தயார்நிலையில் வைக்கப்படும்.

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டாலும், மீண்டும் பட்டியலில் பெயரைச் சேர்க்கவும் திருத்தவும் வாய்ப்பு வழங்கப்படும். சிறப்பு முகாம்களும் நடத்தப்படும். இடம் பெயர்ந்து வேறு ஊர்களில் குடிபுகுந்திருப்பவர்கள் பெயர்களும் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற அரசியல் கட்சிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படும்.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதைக் கடந்த முதியவர்களுக்கும் தபால் மூலம் வாக்களிக்க வாய்ப்பு தரப்படும். இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இதுகுறித்து அரசியல் கட்சிகள் எழுப்பியிருக்கும் சந்தேகங்கள் விரைவில் தீர்க்கப்படும் என்றிருக்கிறது தேர்தல் ஆணையம்.

வாக்குச்சாவடி அதிகாரிகள் அவர்களின் வசிப்பிடத்திற்குச் செல்வார்கள். அது நடமாடும் வாக்குச்சாவடி போலச் செயல்படும். அவர்கள் வீட்டிலிருந்தபடி வாக்கு செலுத்தலாம். இதை அரசியல் கட்சி பிரதிநிதிகளும் கண்காணிக்கலாம்.

சிறப்பு உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் 1950 என்ற எண் மூலம் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை முன்வைக்கலாம்.

தமிழகத்தில் தேர்தலில் வேட்பாளர்களின் செலவினங்கள் தொடர்பான புகார்கள் அதிகம் வருவது வழக்கம். இவற்றை முறையாகக் கண்காணிக்கத் திட்டம் தெளிவாக வகுக்கப்படும்.

ஆளும்கட்சியான அ.தி.மு.க மே மாதம் வெயிலின் தாக்கம் உச்சம் தொடும் என்பதால், தேர்தலை ஒரு மாதம் முன்பே ஏப்ரல் மாதத்தில் நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறது. இதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை தேர்தல் ஆணையம்.

சட்டம் ஒழுங்கு பிரச்னைகள், பிரச்னை எழக்கூடிய பகுதிகள், ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்னைகள் ஆகியவற்றை அடையாளம் காணப்படும். அதன் அடிப்படையில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் அதற்கேற்ற முன்னேற்பாடுகள் செய்யப்படும்.

ஓட்டுக்காகப் பணம், மதுபானம், பரிசுப் பொருட்கள் வழங்குவது, டிஜிட்டல் மற்றும் பிற முறையில் பட்டுவாடா செய்வது போன்றவை தடுக்கப்படும். இது மிகவும் கடுமையாகப் பின்பற்றப்படும். பணப்பட்டுவாடாவுக்கு எதிராக, கண்காணிப்புக் குழு, பறக்கும் படை, வருமான வரித்துறை மூலம் கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.

கொரோனா தொற்றுள்ளவர்களிடம் இருந்து முன்னரே விண்ணப்பம் பெறப்பட்டு தபால் ஓட்டுகள் வழங்கப்படும்.

தமிழகத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் இருக்கும் வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டு, வாய்ப்பிருந்தால் அதே வளாகத்தில் அல்லது அருகேயுள்ள கட்டடத்தில் மற்றொரு வாக்குச்சாவடி அமைக்கப்படும்.

முதல்முறையாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைன் மூலம் வாக்களிக்கவும் சட்டத்துறை அமைச்சகத்துக்குத் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.