திருமலை திருப்பதியில் லட்டு ஏன் பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது?|Photo Story

பிரபாகரன் சண்முகநாதன்

திருப்பதி சென்று வந்தாலே நீங்கள் எதிர்கொள்ளும் முதல் கேள்வி `லட்டு எங்கே' என்பதுதான். லட்டு ஏன் திருப்பதியில் பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது என்பதற்கு ஒரு வரலாறு சொல்லப்படுகிறது.

சரித்திரக் காலம் முதல் பெருமாளுக்குப் பல வகையான நைவேத்தியங்கள் படைக்கப்பட்டு வருகின்றன. இரண்டாம் தேவராயர் காலத்தில் நைவேத்தியங்களின் எண்ணிக்கை பலவாகப் பெருகியது.

சேகர மல்லாண்ணன் என்கிற அமைச்சர் பலவகையான தானங்களை வழங்கினார். அப்போதுதான் `ஸ்ரீவாரி நைவேத்திய சமயம்’ எனும் முறை ஏற்படுத்தப்பட்டது.

அந்தக் காலத்தில் திருமலையில் உணவகங்கள் அவ்வளவாக இல்லை. பிரசாதங்கள்தான் பக்தர்களின் பசியைப் போக்கும் அருமருந்தாக இருந்தன. பக்தர்களுக்கு அளிக்கப்படும் பிரசாதம் ‘திருப்பொங்கல்’ என்று முன்பு அழைக்கப்பட்டது.

பின்னரே அதிரசம், அப்பம், வடை, சுய்யம், மனோகரப்பொடி பிரசாதங்கள் தயார் செய்யப்பட்டன. இவற்றில் வடை தவிர வேறு எதுவும் வெகு நாள்கள் தாங்காது.

1803-ம் ஆண்டிலிருந்து லட்டு பிடிப்பதற்கு முன்னர் உதிரியாக இருக்கும் பூந்தி, இனிப்புப் பிரசாதமாக வழங்கப்பட்டது. அந்த பூந்திதான் லட்டாக உருப்பெற்றது.

ஏழுமலையானுக்குப் பிரசாதங்களைத் தயாரித்து பூஜைக்கு வழங்கியவர் கல்யாண ஐயங்கார் குடும்பத்தினர். லட்டை அன்றாடப் பிரசாதமாக்கியவரும் இவர்தான் எனச் சொல்லப்படுகிறது.

`கல்யாணம் ஐயங்கார்’ என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்பட்டவரின் இயற்பெயர் ஸ்ரீமான் பூதேரி பத்தங்கி ஸ்ரீனிவாசராகவன்.

இவர் பூதேரி என்ற கிராமத்திலிருந்து தமது உறவினர்களுடன் திருப்பதியில் தங்கி திருமலை ஏழுமலையானுக்குக் கைங்கர்யம் செய்யத் தம்மையும் தம் குடும்பத்தையும் ஈடுபடுத்திக் கொண்டவர்.

ஒருநாள் பெருஞ்செல்வம் படைத்த வியாபாரி ஒருவர், தனது கோரிக்கையை நிறைவேற்றினால், மலை போன்ற பிரமாண்டமான லட்டைத் தயாரித்து பெருமாளின் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு அளிப்பதாக வேண்டிக்கொண்டாராம்.

பெருமாளும் அவருடைய வேண்டுதலை நிறைவேற்றினார். அப்போது உருவானதுதான் லட்டுப் பிரசாதம். முன்னர் மிராசுதாரர்கள் லட்டு செய்யும் பணியை மேற்கொண்டனர். அவர்களுக்கு ஊதியமாக லட்டுகளே தரப்பட்டன.

லட்டு தயாரிக்க 51 பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. 5,100 லட்டுகள் தயாரிக்க 852.5 கிலோ பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. 1996-ம் ஆண்டில் மிராசு உரிமையை நீக்கிவிட்டு தேவஸ்தானமே லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது.

லட்டு என்றாலே திருப்பதிதான் நினைவுக்கு வரும். இன்றும் திருப்பதிக்குச் செல்பவர்கள் லட்டு வாங்காமல் வருவதில்லை. அருளோடு தொடர்புடைய பிரசாதமாக லட்டு திகழ்கிறது.