க.ஶ்ரீநிதி
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்ந்துவரும் நிலையில், அமெரிக்கா உதவிகளை வழங்க முன்வந்திருக்கிறது. முதற்கட்ட மீட்பு நடவடிக்கைக்காகக் குழுக்கள் விரைந்திருப்பதாக அந்த நாட்டின் செய்தித் தொடர்பாளர் நெட் ப்ரைஸ் (Ned Price) தெரிவித்திருக்கிறார்.
தெற்கு பெருவில் பெய்த கடுமையான மழையால் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. இதில் சிக்கி இதுவரை 15 பேர் உயிரிழந்திருக்கிற நிலையில், இறப்பு எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
உக்ரைன் நூலகங்களிலிருந்து ரஷ்யா, சோவியத் தொடர்பான புத்தகங்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரஷ்யமயமாக்கலுக்கு எதிரான (De Russification) இந்தச் செயல்பாட்டில், 19 மில்லியன் புத்தகங்களைத் திரும்பப் பெறுகிறது.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தைத் தாண்டியிருக்கிறது. கடுமையான குளிர் நிலவி வருவதால் மக்கள் மிகுந்த இன்னலைச் சந்தித்துவருகின்றனர்.
இலத்தீன் அமெரிக்கப் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட மர்ம பலூன் சீனாவுக்குச் சொந்தமானது என அந்த நாடு ஒப்புக்கொண்டிருக்கிறது. இருப்பினும் உளவு பார்க்க அனுப்பப்பட்டது என்ற குற்றச்சாட்டை மறுத்திருக்கும் சீனா, அதை வானிலையை ஆராய அனுப்பியதாகத் தெரிவித்திருக்கிறது.
நீண்ட நாள்களாகச் சிகிச்சையிலிருந்த முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷரஃப் (Pervez Musharraf) துபாயில் உயிரிழந்தார். அவரின் உடல் கராச்சியில் நல்லடக்கம் செய்யக் கொண்டுவரப்பட்டது.
சிலியில் ஏற்பட்ட காட்டுத்தீயின் காரணமாக 26 பேர் உயிரிழந்தனர். மேலும் பரவும் தீயைக் கட்டுப்படுத்த சர்வதேச உதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
அமெரிக்காவில் நடந்த கிராமி விருதுகள் வழங்கும் விழாவில் பிரபல பாடகி பியோன்ஸ் (Beyonce) 4 விருதுகளை வென்றார். இதுவரை 32 விருதுகளை வென்று சாதனை படைத்திருக்கிறார்.
உக்ரைன் அதன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஒலெக்சி ரெஸ்னிகோவை (Oleksii Reznikov) மாற்றியிருக்கிறது. அவர்மீது ஊழல் புகார் எழுந்த நிலையில், அவருக்கு பதிலாக கைரிலோ புடனோவ் (Kyrylo Budanov) என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
துருக்கிக்கு உதவிகள் வழங்க இந்தியா முன்வந்திருக்கும் நிலையில், அந்த நாடு இந்தியாவை `தோஸ்த்’ (நண்பன்) என அழைத்திருக்கிறது.