பூமத்திய ரேகையின் நேர்கோட்டில் சூரிய ஒளி... இன்று நிகழ்ந்த ஈக்வினாக்ஸ் நிகழ்வு பற்றி தெரியுமா?

க.சுபகுணம்

பூமத்திய ரேகைக்கு மேல் சூரியன் இருந்து, இரவும் பகலும் சரிசமமான கால அளவில் அமையும் காலகட்டத்தை ஈக்வினாக்ஸ் (Equinox) என்றழைக்கின்றனர்.

இது மார்ச் மாதத்தில் ஒருமுறையும் செப்டம்பர் மாதத்தில் ஒருமுறையும் என்று ஆண்டிற்கு இரண்டு முறை நிகழ்கின்றது.

பூமி தனது அச்சில் 23.5 டிகிரி சாய்ந்தவாறு, சூரியனைச் சுற்றி நீள்வட்டப் பயணிக்கின்றது.

பூமியில், இரவு மற்றும் பகலுக்கான கால அளவு, கோடைக்காலம், குளிர்காலம், இலையுதிர்க் காலம் என்று ஒவ்வொரு காலநிலைக்கும் மாறிக்கொண்டேயிருக்கும்.

குளிர்காலங்களில் இரவின் நீளம் அதிகமாகவும் கோடைக்காலங்களில் பகலின் நீளம் அதிகமாகவும் இருக்கும்.

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதத்தின் 19, 20, 21 ஆகிய தேதிகளில் ஏதாவதொரு நாளில், பகல் மற்றும் இரவுக்கு இருக்கும் கால அளவு சரியாகப் பன்னிரண்டு மணிநேரம் இருக்கும்.

இந்த ஆண்டில் இந்த நாள் மார்ச் 20-ம் தேதியான இன்று வந்துள்ளது.

இந்த நாளில், பூமியின் இரண்டு துருவங்களுமே சூரியக் கதிர்களைச் சமமாகப் பெறுகின்றன.

ஆகையால், இரவு மற்றும் பகலுக்கான கால அளவு ஓரளவுக்குச் சரிசமமாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.

உலகிலேயே நியூசிலாந்தில் முதலில் சூரிய உதயம் நிகழ்கின்றது. அதன்படி, மார்ச் 20, 2021 அன்று காலை நியூசிலாந்தில் 7:23 மணிக்கு உதித்த சூரியன் மாலை 7:33 மணிக்கு மறைந்தது.

சரியாக பகல்நேரம் 12 மணிநேரம் 10 நிமிடங்களும், இரவு நேரம் 11 மணிநேரம் 50 நிமிடங்களும் நீண்டுள்ளது. கிட்டத்தட்ட சம அளவு நேரத்திற்கு இரவு மற்றும் பகலின் நீளம் இருந்துள்ளது.

சென்னையில் இன்று காலை, 6:13 மணிக்கு சூரியன் உதித்துள்ளது. மாலை 6:20 மணிக்கு சூரியன் மறைந்துள்ளது.

பூமத்திய ரேகையின் நேர்க்கோட்டில் சூரியன் இருப்பதால், வடதுருவம் மற்றும் தென்துருவத்திற்கு சூரியன் தன் ஒளியைச் சரிசமமாகப் பாய்ச்சுகின்றது.

இந்த ஆண்டில் (2021) இந்த நிகழ்வு மார்ச் 20-ம் தேதியான இன்றுதான் நிகழ்துள்ளது.