இ.நிவேதா
காமத்தின் ஆரம்பத்தில் கணவனுக்கும் சரி, மனைவிக்கும் சரி... தேடலும், மோகமும் அதிகமாக இருக்கும். திருமணமான புதிதில் ஒரே நாளில் பலமுறை, நீண்ட நேரம் என உறவு கொள்வார்கள்.
சில மாதங்களில் இது மெதுவாகக் குறையும். சிலருக்கு சில வருடங்களில் குறையலாம். சிலருக்கு சில பல வாரங்களில் குறையலாம். இந்தத் தொய்வைச் சரிசெய்ய முடியும். அது தம்பதிக்குத் தம்பதி வேறுபடும்.
எல்லா தம்பதியின் வாழ்க்கையையும் படுக்கையறைக்கு உள்ளே, படுக்கையறைக்கு வெளியே என இரண்டாகப் பிரிக்கலாம். படுக்கையறைக்கு உள்ளே நிகழ்கிற தொய்வற்ற அன்னியோன்யம்தான் படுக்கையறைக்கு வெளியேயான வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது.
அது தொய்வடையாமல் இருக்க, இடத்தையும் நிலைகளையும் மாற்றிக் கொண்டே இருங்கள். ஒருநாள் படுக்கைக்கு மேலே என்றால், மறுநாள் சில்லிடும் தரையில் உங்கள் உறவு நிகழலாம்.
அடுத்து கர்ப்பகாலம். இயல்பாகவோ, உடல்நிலைக் காரணங்களாலோ இந்தக் காலகட்டத்தில் காமம் தொய்வடைந்து இருக்கும்.
குழந்தை பிறந்த பிறகு, உடல் பலவீனம், செக்ஸ்தானே தன்னுடைய இவ்வளவு பலவீனத்துக்கும் காரணமென்கிற எரிச்சல் போன்றவற்றால் பெண்ணின் காம உணர்வு தொய்வடைய ஆரம்பிக்கும்.
ஆணுக்கோ, இது வேறு மாதிரி தொய்வை ஏற்படுத்தும். குழந்தை வளர்ப்பில் விருப்பத்துடன் ஈடுபடுகிற அப்பாக்களில் சிலருக்குக் காமத்தில் ஈடுபாடு அதிகரிக்க ஆரம்பிக்கும். சிலருக்கோ குறைய ஆரம்பிக்கும். இது ஆய்வுகள் சொல்கிற முடிவு.
குழந்தை வளர்ப்பில் ஈடுபடும்போதும் காதல் செய்யலாம். காம உணர்வில் தொய்வை உணர்பவர்கள் அடிக்கடி அணைப்பு, முத்தப் பரிமாற்றம், மனைவியின் உடலை வருத்தாத உறவு என இருக்கலாம்.
தங்களுடைய தாம்பத்ய வாழ்க்கையில் தொய்வு ஏற்பட்டிருப்பதை இருவருமே உணர்ந்திருப்பார்கள். ஆனால், அதை சரிசெய்ய யார் முதலில் நெருங்குவது என்று தவித்துக் கொண்டிருப்பார்கள்.
உங்கள் இல்லறத்தின் இனிமையைக் காப்பாற்ற யார் வேண்டுமானாலும் இதைத் தொடங்கலாம். அதற்கு நீங்கள் இருவருமே ஒரே படுக்கையில் உறங்க வேண்டும், அவ்வளவுதான்.
கூடவே, கணவனும் மனைவியும் தனிமை கிடைக்கும்போது தாங்கள் ஏற்கெனவே அனுபவித்த காமம் குறித்து உரையாடலாம்.
காமம் அனுபவித்த பிறகு, இருவரும் பரஸ்பரம் உச்சகட்டம் அடைந்தோமா என்பதைப் பற்றியும் மெல்லிய குரலில் கேட்டுக்கொள்ளலாம். எல்லா தொய்வுகளும் சரியாகும்.