பகுத்தறிவு பகலவனின் 144வது அகவை தினம் இன்று! |#Visual Story

நெ.ராதிகா

ஈ.வெ.ரா, தந்தை பெரியார், வைக்கம் வீரர், பகுத்தறிவு பகலவன் என தமிழ் நெஞ்சங்களால் அன்போடு அழைக்கப்படும் பெரியாரின் இயற்பெயர் ஈ.வெ.ராமசாமி. இவர் 17.09.1879 ஈரோட்டில் பிறந்தார்.

பெரியார்

இன்று பெரியாரின் 144வது பிறந்தநாள். இவர் பெண் சுதந்திரத்திற்காக பெரிதும் பாடுபட்டவர். ஜாதி கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாசிரம தர்மம், பெண்களை தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றுக்கு எதிராக குரல் கொடுத்தவர் பெரியார்.

பெரியார்

ஈ.வெ.ராமசாமியாக இருந்தவரை நாம் ‘பெரியார்’ என அழைக்கிறோம். பெரியார் எனும் பட்டம் அவருக்கு 1938-ம் ஆண்டு சென்னையில் நடந்த பெண்கள் மாநாட்டில், பெண் விடுதலை கருத்துகளுக்கும், போராட்டங்களுக்குமாக பெண்களால் கொடுக்கப்பட்டது.

பெரியார்

பெண் கல்விக்குக் குரல் கொடுத்தல், இளம் வயது திருமணங்களுக்கு எதிர்ப்பு, கட்டாயத் திருமணங்களை ஒழித்தல், மறுமணங்களை ஊக்கப்படுத்துதல், பெண்களுக்குச் சொத்துரிமை என வாழும் காலமெல்லாம் பெண்களின் அடிப்படை உரிமைகளுக்கான குரல் கொடுத்தவர் அவர்.

பெண் கல்வி |

கணவனை இழந்த பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாது; நகை எதுவும் அணியக் கூடாது என கைம்பெண் படும் துன்பங்களைக் கண்கூடாகப் பார்த்ததால் அவர்களின் மறுமணத்திற்காக வலிமையாகக் குரல் கொடுத்தவர். சீர்திருத்தங்களை தன் வீட்டில் இருந்தே தொடங்கினார் பெரியார். திருமணமாகி ஒரே மாதத்தில் கைம்பெண்ணான தன்னுடைய தங்கையின் மகளுக்கு மறுமணம் செய்து வைத்தார்.

பெரியார்

பெண்கள் சம உரிமை பெற வேண்டுமென்றால் கல்வியறிவு அடிப்படை என்பதை உணர்ந்து இருந்த பெரியார், ஆண்களைப் போல் பொருளாதார சுதந்திரத்திற்கு வழிவகை செய்வதும் மிகவும் அவசியம் என்று வலியுறுத்தினார். ``ஆண்களைப் போல எல்லா விளையாட்டுகளிலும் பெண்கள் ஈடுபட வேண்டும்; அப்போது தான் அவர்களுக்கும் பலமும், தைரியமும், தன்னம்பிக்கையும் ஏற்படும்" என்றார்.

புதுமைப் பெண்

தாலியை அடிமைச் சின்னமாகக் கருதிய பெரியார், திருமணம் ஆனவர், ஆகாதவர் என்ற வேறுபாட்டைத் தாலி எடுத்துக்காட்டுவதாக இருந்தால் ஆண்களுக்கு உள்ள அடையாளம் என்ன என்று கேட்டார். எனவே, பெண்களும் ஆண்களுக்குத் தாலி கட்டுவதே நியாயம் என்று வாதிட்டார்.

தாலி

சாதி ஒழிப்புக்கும், பெண் விடுதலைக்கும் தடையாய் இருந்த மதம், கடவுள், சாஸ்திரங்கள் என எல்லாவற்றையும் கடுமையாகச் சாடி, அவற்றைச் சுக்கு நூறாக்கியவர். மனிதனுக்கு மனிதன் சமம் என்று சூளுரைத்தவர். இந்திய விடுதலைக்கு முன்னரே ‘பெண் விடுதலை’ பற்றிப் பேசியவர் பெரியார்.

பெண்

ஆணுக்குப் பெண் சரிநிகர் என சொல்வதே ‘பெரியாரின் பெண்ணியம்’. பெண்களுக்கு எதிரான எந்த ஒரு கருத்தையும், செயலையும் தகர்த்தெரியும் தளமே ‘பெரியாரின் பெண்ணியம்’. பெண்களுக்கு ஆண்களைப் போலவே எல்லாவற்றிலும் சம உரிமை வழங்குவதே ‘பெரியாரின் பெண்ணியம்’.

பெரியார்