மத்யாஷ்டமி, மகாளய அமாவாசை, சரஸ்வதி பூஜை - புண்ணியம் தரும் புரட்டாசி மாத விழாக்கள் விசேஷங்கள்!

சைலபதி

2022-ம் ஆண்டு புரட்டாசி மாதம் 18.09.2022 அன்று பிறக்கிறது. இந்த மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ நாள்கள் குறித்து அறிந்துகொள்வோம்.

திருமலை திருப்பதி

18.9.22 மத்யாஷ்டமி

பித்ருக்கள் வழிபாட்டுக்கு உரிய நாள். தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாட்டுக்கு உரிய நாள். இந்த நாளில் செய்யும் முன்னோர் வழிபாடு நம் பாவங்களைப் போக்கும்.

21.9.22 & 6.10.22 ஏகாதசி

புரட்டாசி என்றாலே பெருமாள் வழிபாடுதான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். அப்படிப் புண்ணியம் நிறைந்த புரட்டாசியில் பெருமாளை விரதமிருந்து வழிபட உகந்த நாள்கள் ஏகாதசி தினங்கள். இந்த மாத ஏகாதசியில் விரதம் இருந்து வழிபட்டால் ஆண்டு முழுவதும் ஏகாதசி விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்பார்கள்.

23.9.22 & 7.10.22 பிரதோஷம்

தோஷங்கள் தீர்க்கும் நாள் பிரதோஷம் என்பார்கள். புரட்டாசி மாதத்தில் வரும் பிரதோஷ நாள்களில் சிவ வழிபாடும் நந்தி வழிபாடும் செய்ய பிதுர் தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.

25.9.22 மகாளய அமாவாசை

கட்டாயம் முன்னோர் வழிபாடு செய்ய வேண்டிய நாள். ஆண்டு முழுவதும் 12 அமாவாசைகள் வந்தாலும் ஆடி, புரட்டாசி. தை அமாவாசைகள் மிகவும் முக்கியமானவை. இந்த மூன்றிலும் நடுவில் வரும் புரட்டாசி மகாளய அமாவாசையில் செய்யும் தர்ப்பணம் முதலான சடங்குகள் மிகுந்த புண்ணிய பலனைத் தரும்.

26.9.22 - நவராத்திரி ஆரம்பம்

நவராத்திரியின் முதல் நாளில் கொலு வைக்க வேண்டும். கொலு வைக்கும் வழக்கம் இல்லாதவர்கள் கும்பம் வைத்து அதில் அம்மனை ஆவாஹனம் செய்து ஒன்பது நாள்களும் வழிபடலாம்.

3.10.22 துர்காஷ்டமி

நவராத்திரியின் ஒன்பது நாள்களுமே விசேஷம் என்றாலும் துர்காஷ்டமி மிகவும் சிறப்பான நாள். இந்த நாளில் வீட்டில் அம்பிகைக்கு விசேஷ வழிபாடுகள் செய்வது நல்லது. அம்மன் ஆலயங்களுக்குச் சென்று வணங்கி வந்தால் வாழ்வில் வெற்றிகள் பெருகும்.

துர்கை

4.10.22 சரஸ்வதி பூஜை

கல்விக்கு அதிபதியாம் சரஸ்வதியை வழிபட வேண்டிய நாள். இந்த நாளில் நாம் செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும் அது விருத்தியடைய அன்னை சரஸ்வதியை வழிபட வேண்டியது அவசியம். சரஸ்வதி தேவிக்கு வெண்ணிற மலர்கள் சாத்தி வழிபடுவது விசேஷம்.

சரஸ்வதி தேவி

5.10.22 விஜய தசமி

இன்று அம்பிகையை வணங்கித் தொடங்கும் செயல்கள் யாவும் வெற்றி தரும். குறிப்பாகக் குழந்தைகளுக்கு அட்சராபியாசம் எனப்படும் எழுத்தறிவித்தலைச் செய்வது நல்லது. புதிய கலைகள் கற்கத் தொடங்கவும் தொழில்கள் தொடங்கவும் இந்த நாள் மிகவும் உகந்த நாள்.

9.10.22 பௌர்ணமி

அம்பிகையை வழிபட உகந்த நாள் பௌர்ணமி. இந்த நாளில் அம்பிகையை நினைத்து விரதம் இருந்து மாலை வழிபாடு செய்து பால் சாதம் நிவேதனம் செய்தால் சகல செல்வங்களும் சேரும் என்பது நம்பிக்கை.

13.10.22 சங்கடஹர சதுர்த்தி

தேய்பிறை சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி என்று போற்றப்படுகிறது. இந்த நாளில் காலை முதல் விரதம் இருந்து சந்திரன் உதிக்கும் வேளையில் விநாயகரை வழிபட்டு சந்திர தரிசனம் செய்தால் நம் வாழ்வில் இருக்கும் சங்கடங்கள் தீரும் என்பது நம்பிக்கை.