தீராத நோய்கள் தீர்க்கும் திருச்சி திருவாசி ஆலயம்! |Visual Story

மு.ஹரி காமராஜ்

`சமீவனேஸ்வரர்' (வன்னிவனேஸ்வரர்) என்ற திருநாமம் கொண்ட ஈசன் இங்கு சக்தி, பிரம்மா, திருமகள், அகத்தியர் ஆகியோருக்கு அருள் பாலித்தார். அந்த ஊரே தற்போது திருப்பாச்சிலாச்சிராமம் என்றும் திருவாசி என்றும் வழங்கப்படுகிறது.

துணி வளர் திங்கள் துலங்கி விளங்க... எனும் பதிகம் பாடி கொல்லிமழவனின் மகளுக்கு உண்டான கொடும் பிணியை அகற்றினார். அதனால் இது நோய் தீர்க்கும் தலமாக விளங்கி வருகிறது.

நாகத்தின் மீது ஏறி நின்றாடும் கூத்தபிரானை இங்கு மட்டுமே தரிசிக்க முடியும். இங்கு கொடிய நோயை பாம்பாக்கி அதன்மீது ஆடுவதால் முயலகன் இல்லை. சர்ப்ப நடராஜர் எனும் இந்த திருமேனியை தரிசிக்க தீராத நோயெல்லாம் தீரும் என்பது ஐதீகம்.

இங்குள்ள சர்ப்ப நடராஜருக்கு விபூதி அபிஷேகம் செய்து, அந்த விபூதியை 48 நாள்கள் தொடர்ந்து பூசிவர, நரம்பு சம்பந்தமான பிரச்னைகள் யாவும் நீங்கும். வயிற்று வலி குணமாகும். வாதம், மாதவிடாய் பிரச்னைகள் தொடர்பான சிக்கல்கள் நீங்கும்.

குறிப்பாக குழந்தைகளுக்கு வரும் நோய்களுக்கு இந்தத் தலம் பரிகாரத் தலமாக விளங்கி வருகிறது. குழந்தைகளின் பாலாரிஷ்டம் எனும் உபாதையைப் போக்கும் தலமாகவும் இது விளங்குகிறது.

காலை 7 மணி முதல் 12 மணிக்குள், அம்பாளுக்குப் பால் அபிஷேகம்செய்து, பாதிப்புள்ள குழந்தைகள் பெயரில் அர்ச்சனை செய்து, அந்த அபிஷேகத் தீர்த்தத்தை குழந்தைகள் மேல் தெளிக்கச் செய்தால், பாலாரிஷ்டம் தீரும் என்பது நம்பிக்கை.

ஈசனைப் பாடிய சுந்தரருக்கு மண் பரிசாகக் கிடைத்தது. இதனால் சுந்தரர் கோபித்துக்கொள்ள, ஈசன் அதை பொன்னாக்கி மாற்று எனும் தரம் உரைத்துக் கூறினாராம். இதனால் ஈசனுக்கு ‘மாற்று உரை வரதர், மாற்று உரைத்த ஈஸ்வரர்’ என்ற திருநாமங்களும் உண்டு

மண்ணுலகின் முதல் சகஸ்ர லிங்கம் இங்குதான் உள்ளது. இங்கு ரிஷிகள் கூடி ஈசனை வழிபட்டு இறுதியில் அவர்கள் அனைவரும் ஒவ்வொரு லிங்கமாக மாறி, ஒன்று கூடி ஈசனுள் கலந்து உருவான சகஸ்ர லிங்கமே இங்கு அபூர்வ சகஸ்ர லிங்கமாக உள்ளது.

இந்த அபூர்வ சகஸ்ர லிங்கம் மன அழுத்தம், மனோரீதியான பிரச்னைகள் கொண்டவர்களுக்கு நல்மருந்தாக விளங்கி வருகிறது. இந்த சகஸ்ர லிங்கத்துக்கு பால் அபிஷேகம் செய்து, அதை பிரசாதமாக அருந்தினால் நிவாரணம் கிட்டும் என்பதும் ஐதீகம்.

நோயை மட்டுமல்ல, திருமணம் வரம் அருளும் தலமாகவும் இது உள்ளது. இங்குள்ள அன்னமாம் பொய்கையில் வெள்ளி, செவ்வாய், ஞாயிறு தினங்களில் காலை 7 மணிக்குள் நீராடி, அம்பாளுக்கு 11 நெய் தீபங்கள் ஏற்றி வணங்க திருமணம் கைகூடும் என்கிறார்கள்.

அம்பாள் சந்நிதியின் முன்பு உள்ள 2 துவாரபாலகியருக்கு மஞ்சள் கயிறு கட்டி வழிபட்டால் திருமண வரம் கிட்டுமாம். இவர்களின் முன் தொட்டில் கட்டி வழிபட்டால் குழந்தை வரம் கிட்டுமாம். இந்த துவாரபாலகியர் வழியாக, நம் கோரிக்கைகளை அம்பாள் ஏற்றுக் கொள்வதாக ஐதீகம்.