சனிபகவான் தோஷம் நீக்கும் சக்திவாய்ந்த 9 திருத்தலங்கள்! |Visual Story

சைலபதி

திருவாதவூர் திருமறை நாதர்

மதுரை அருகே உள்ளது. சனியின் வாத நோய் நீங்கிய தலம். எனவே இங்கு உள்ள திருமறைநாதர் திருக்கோயிலில் வழிபட்டால் ஏழரைச் சனி மற்றும் அஷ்டம சனியின் பாதிப்புகள் முற்றிலும் அகலும் என்பது நம்பிக்கை.

மயிலாடுதுறை மயூரநாதர் கோயில்

சனிபகவானின் அதிதேவதை யமன். யமன் சிவனை வழிபட்டு சாபம் தீர்ந்த தலம் மயூரநாதர் ஆலயம். எனவே இங்கு வந்து மயூரநாதரை வழிபட்டால் சனி தசையினால் துன்புறுபவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

திருச்செந்தூர் முருகன் கோயில்

திருச்செந்தூர் செந்திலாண்டவர் திருக்கோயிலில் நவகிரக சந்நிதி இல்லை. மாறாக சனீஸ்வரர் சந்நிதி மட்டும் உண்டு. நான்கு அடி உயரத்தில் அருள்பாலிக்கும் சனிபகவானை வணங்கினால் சகலவிதமான சனி தோஷங்களும் நீங்கும் என்பார்கள் பக்தர்கள்.

குச்சனூர் சனிபகவான்

சனிபகவான் கோயில்கொண்டு அருள்பாலிக்கும் தலம் குச்சனூர். தேனி மாவட்டம் சுருளி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் இந்த ஆலயத்துக்கு வந்து வேண்டிக்கொண்டால் சனி பகவானின் பார்வையால் விளையும் கெடுபலன்கள் விலகும் என்கிறார்கள்.

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர்

சனிபகவான் தர்பாரண்யேஸ்வரரை வணங்கிப்பேறு பெற்ற தலம் திருநள்ளாறு. இங்குள்ள ஈசனை வணங்கி வழிபட்டு சனிபகவானையும் தொழுது வந்தால் சகலவிதமான தோஷங்களும் நீங்கும் என்பர்.

பொழிச்சலூர் சனிபகவான்

வட திருநள்ளாறு என்று அழைக்கப்படுவது பொழிச்சலூர் அகத்தீஸ்வரர் திருக்கோயில். சென்னைக்கு அருகே உள்ள இத்தலத்தில் அருளும் ஈசனை சனிபகவான் வணங்கி வழிபட்டால் சகல துன்பங்களும் நீங்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

சூரியனார் கோயில்

சூரியபகவானுக்குரிய தலமாக விளங்கும் சூரியனார் திருக்கோயிலில் சனிபகவான் தன் இரு மனைவியருடன் அருள்பாலிக்கிறார். இங்கு வந்து சனிபகவானை வழிபட்டால் அனைத்து சனி தசை கஷ்டங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

பொங்கு சனீஸ்வரர் ஆலயம்

திருவாரூரில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது திருக்கொள்ளிக்காடு. அங்குள்ள அக்னீஸ்வரர் கோயிலில் அருளும் சனிபகவானை வழிபட்டால் வாழ்வில் மங்கலங்கள் பொங்கும் என்பது நம்பிக்கை.

ஏரிக்குப்பம் யந்திர சனீஸ்வரர்

வேலூர் மாவட்டம் ஆரணியிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது யந்திர சனீஸ்வரர் திருக்கோயில். இங்கு சனிபகவான் யந்திர வடிவில் அருள்கிறார். இங்கு வந்து வழிபட்டால் ஏழரை சனியின் பாதிப்புகள் விலகும் என்கிறார்கள்.