நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில்: 35 அடி உயரம், 150 டன் எடை கொண்ட சிலை; ஆச்சர்யத் தகவல்கள்|Photostory

சைலபதி

சென்னை நங்கநல்லூர் ராம்நகரில் அமைந்துள்ளது அருள்மிகு ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் திருக்கோயில். இங்கு ஆஞ்சநேயர் பிரமாண்டமாகக் காட்சிகொடுக்கிறார்.

நங்கநல்லூர் ஆஞ்சநேயர்

நங்கநல்லூர் ராம்நகரில் சுமார் ஏழு கிரௌண்ட் பரப்பளவில் 'மாருதி பக்த சமாஜம் டிரஸ்ட்டால் இந்த ஆலயம் கட்டப்பட்டது.

ஆஞ்சநேயர் விக்ரகம் செய்வதற்கு வந்தவாசி அருகில் உள்ள பரமநல்லூர் என்ற இடத்தில் உள்ள கல் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆலயக் குழுவினர் அந்தக் கல்லின் சிறிய பாகத்தை வெட்டி எடுத்துக்கொண்டு காஞ்சி சென்றது.

அப்போது மௌன விரதத்திலிருந்த ஸ்ரீ பரமாச்சார்யார் அவர்கள் தன்னுடைய தீர்க்க தரிசனத்தினால், இந்தக் கல் சரியானதே என்று ஆசி கூறி அனுப்பிவைத்தார்.

பதினாறு ஆக்ஸில் கொண்ட லாரியில், 35 அடி நீளம், 10 அடி அகலம், 10 அடி பருமன் கொண்ட 150 டன் எடையுள்ள அந்தக் கருங்கல்லைக் கொண்டு வந்தனர்.

வண்டியோட்டி ஒரு கிறிஸ்துவர், வண்டி உரிமையாளர் ஒரு முகமதியர், கொண்டுவர முயற்சி செய்யும் குழுவோ இந்துக்கள்.

அந்தக் காலத்தில் தற்போது இருப்பதுபோன்ற பாலங்கள் இல்லை. பழவந்தாங்கல் ரயில் நிலையத்தைக் கடப்பதே மிகவும் கடினமாக இருந்ததாம். வண்டி நங்கநல்லூர் கட்டுமான இடத்தை அடைந்ததும் அதன் டயர்கள் பலூன்களைப் போல வெடித்தனவாம்.

அந்த வளாகத்திலேயே சிலை வடிக்கும் பணி நடைபெற்றது. சிற்ப கலா ரத்னம்’ முத்தையா ஸ்தபதி இந்தத் திருப்பணியை மேற்கொண்டார். அப்போது பல்வேறு அதிசயங்கள் அங்கு நிகழ்ந்தனவாம்.

32 அடி உயரத்தில் ஆஞ்சநேய சுவாமி சாந்த சொரூபியாக உருவாகி அங்கே கோயில்கொண்டார்.

92 அடி உயரமுள்ள கோபுரத்தின் கலசம் செப்பினால் செய்யப்பட்டுத் தங்கத்தகடுகளால் மூடப்பட்டுள்ளது. ஆகம சாஸ்திரப்படி கோவில் கட்டபட்டது. ஶ்ரீராமர், ஶ்ரீகிருஷ்ணர், ஶ்ரீகருடர், ஶ்ரீவிநாயகர், ஶ்ரீநாகர் ஆகிய தெய்வங்களுக்குப் பிறகு சந்நிதிகள் கட்டப்பட்டன.

முதல் கும்பாஷேகம் 1995 மே மாதம் 19 - ம் தேதியன்று லட்சக் கணக்கான பக்தர்கள் முன்னிலையில் மிகவும் விமர்சையாக நடைபெற்றது.