கட்டாயம் தரிசிக்க வேண்டிய தமிழகத்தின் 9 நரசிம்மத் தலங்கள்! |Photo Story

சைலபதி

தமிழகத்தின் தலைசிறந்த நரசிம்மத் தலங்களில் ஒன்று சோளிங்கர். ஒரு கடிகைப் பொழுது அதாவது 24 நிமிடங்கள் இந்தத் தலத்தில் தங்கினாலே போதும்; பெரும்புண்ணியம் கிடைக்கும் என்கின்றன ஞானநூல்கள்.

பஞ்ச நரசிம்ம க்ஷேத்திரங்களில் முதலாவதாக சிறப்பிக்கப்படுகிறது. திருமங்கையாழ்வாரின் அவதாரத்தலம் இதுவாகும்.உக்கிர நரசிம்மராக இருந்தபோதிலும் முகத்தில் அதீத கோபம் காட்டாமல், அடிபணிவோர்க்கு அருள்பாலிக்கும் அற்புதத் தலமாகும்.

‘திருநகரி திருக்கோயிலில் இரண்டு நரசிம்ம மூர்த்தியர் அருள்பாலிக்கிறார்கள். அதாவது, பஞ்ச நரசிம்ம தரிசனத்தில் இரண்டு மூர்த்தியரின் தரிசனம் இந்த ஒரே திருத்தலத்தில் கிடைத்துவிடுகிறது. திருக்கோயிலின் திருமங்கையாழ்வார் சந்நதிக்குப் பின்புறம் வடக்கு நோக்கியபடி திகழ்கிறது ஸ்ரீஹிரண்ய நரசிம்மரின் சந்நிதி.

உக்கிரம் தணியாமல் இருந்த ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின் கோபத்தைத் தணிக்கும் பொருட்டு, ஸ்ரீமகாலட்சுமி தாயார் ஸ்வாமியின் வலது தொடையில் வந்து அமர்ந்தார். அவரை ஆலிங்கனம் செய்து, உக்கிரம் தணிந்து அருள்பாலித்தார் ஸ்ரீநரசிம்மமூர்த்தி. அதனால் இவ்வூர் திருவாலி என்றழைக்கப்படுகிறது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரத்திலிருந்து தென்மேற்கில் சுமார் 24 கி.மீ. தொலைவில் உள்ளது நெருப்பூர். நரசிம்மர், தவம் புரிந்த இடம் ஆதலால், இவ்வூர் நெருப்பூர் என்று பெயர் பெற்றதாம். நெருப்பூரிலிருந்து இடப் பக்கமாகப் பிரியும் சாலையில் குகை நரசிம்மர் ஆலயம் உள்ளது.

விழுப்புரம்- உளுந்தூர்ப் பேட்டை நெடுஞ்சாலையில், பரிக்கல் அமைந்துள்ளது. பரிகலாசுரன் வதம் செய்யப் பட்டதால் அந்தத் தலம் ‘பரிகல புரம்’ என்று அழைக்கப்பட்டு, பின் ‘பரிக்கல்’ என்று மருவியது. பரிக்கல் நரசிம்மர், மிகப் பெரும் கடன் தொல்லைகளிலிருந்து மீளவும், உடலிலுள்ள நோய்கள் நீங்கி நலம் பெறவும், எதிரிகளால் ஏற்படும் அபாயங்களிலிருந்து மீளவும் அருள்புரிபவர்.

மதுரையிலிருந்து மேலூர் செல்லும் சாலையில் 4 கி.மீ. தொலைவிலுள்ளது ஒத்தக்கடை. இங்குதான் உள்ளது இந்த யானைமலை. இங்கு கருவறையில் நரசிங்கப் பெருமாள் யோக நரசிம்மராகக் காட்சி தருகிறார். பிரமாண்ட திருமேனியரான இந்த நரசிம்மரை வழிபட்டால் மன அமைதி கிட்டும் என்பது நம்பிக்கை

திருநெல்வேலி கீழப்பாவூரில் பொதிகை மலைச்சாரலில் தவமியற்றிய பிரம்மன், காச்யப முனிவர், நாரதர், வருணன், சுகோசன் ஆகியோருக்கு ஶ்ரீதேவி மற்றும் பூதேவி சமேத நரசிம்மராக 16 திருக்கரங்களுடன் காட்சி தந்தார். பிறகு, அங்கேயே நிரந்தரமாக எழுந்தருளி, காலம்தோறும் வழிபடும் பக்தர்களுக்கு அருள் புரிந்தும் வருகிறார்.

ஸ்ரீநரசிம்மர்

ஸ்ரீரங்கத்தில் நரசிம்மப்பெருமாள் காட்டழகிய சிங்கராகவும் மேட்டழகிய சிங்கராகவும் அருள்பாலிக்கிறார். கம்பனின் ராமாயணத்தை அங்கீரிப்பதற்கு விமான சிற்பத்திலிருந்து வெளிவந்த நரசிம்மரை மேட்டழகிய சிங்கர் என்பர். இங்கு நரசிம்மரை வணங்க சகல சம்பத்துகளும் கிட்டும் என்பது நம்பிக்கை.