தடுப்பூசி நிறுவனங்களை குறிவைக்கும் ஹேக்கர்கள்... முன்னணி நாடுகளுக்கு மைக்ரோசாஃப்ட் அலெர்ட்!

ம.காசி விஸ்வநாதன்

முன்னணி டெக் நிறுவனங்களுள் ஒன்றாகக் கருதப்படும் மைக்ரோசாஃப்ட், கொரோனாவுக்கான தடுப்பூசி தயாரிக்கும் மருந்து நிறுவனங்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. ரஷ்யா மற்றும் வடகொரியாவைச் சேர்ந்த ஹேக்கர்கள் தடுப்பூசி தொடர்பான விவரங்களைத் திருடுவதில் தீவிரமாக இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இந்த பெருந்தொற்றுக்கு எதிராகப் போராடிவரும் சுகாதார அமைப்புகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பல சைபர் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுவருகின்றன. இந்த ஹேக்கர்கள் குறிப்பாகத் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களைக் குறிவைக்கின்றன. சமீபத்தில் அப்படி நடந்த சில தாக்குதல்கள் குறித்த விவரங்களை அரசுகளிடம் பகிர்ந்துள்ளோம். உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொண்டுள்ளோம்

- மைக்ரோசாஃப்ட்

குறிவைக்கப்படும் நாடுகள்:

இந்தியா, கனடா, பிரான்ஸ், தென்கொரியா மற்றும் அமெரிக்காவில் இருக்கும் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களே பெரிதும் குறிவைக்கப்பட்டிருக்கின்றனவாம்.

குறிவைக்கும் ஹேக்கர் அமைப்புகள்:

Strontium(Fancy Bear) என்ற ரஷ்யாவைச் சேர்ந்த அமைப்பும் வடகொரியாவைச் சேர்ந்த Zinc (Lazarus Group) மற்றும் Cerium அமைப்புகளும் இந்த தாக்குதல்களை நிகழ்த்திவருகின்றன. மறைமுகமாக அந்தந்த நாட்டின் அரசுகளால் ஊக்கிவிக்கப்படும் ஹேக்கர் அமைப்புகளே இவை.

ரஷ்யாவின் Strontium அமைப்பு Password spray மற்றும் brute force login முறைகளைப் பயன்படுத்திவருகிறது. இது பல லட்சம் முறை ஒருவரின் பாஸ்வேர்ட்டை மாற்றி மாற்றிப் பதிவிட்டு உள்ளே செல்லும் முறை. இதில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுதான். Zinc மற்றும் Cerium அமைப்புகள் பெரும்பாலும் spear-phishing முறைகளையே பயன்படுத்துகிறது. இது போலி மெயில்களை அனுப்பி தகவல்களைத் திருடும் முறை.

இதில் பெரும்பாலான தாக்குதல்கள் ஏற்கெனவே இருக்கும் சைபர் அரண்களே முறியடிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்திருக்கிறது மைக்ரோசாஃப்ட். இதற்கு முன்பு அமெரிக்காவின் FBI மற்றும் Homeland Security-ன் CISA சீன ஹேக்கர்கள் கொரோனா தொடர்பான தங்களது ஆய்வுகளைத் திருடப்பார்க்கிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருந்தது.

கொரோனாவை கட்டுப்படுத்தும் தடுப்பூசிகளில் 12 தடுப்பூசிகள் மூன்றாவது சோதனை கட்டத்திலும் இருக்கின்றன. 6 தடுப்பூசிகளுக்கு ஆரம்பக்கட்டமாக குறைந்த அளவில் மட்டும் பயன்படுத்த சில நாடுகளில் ஒப்புதல் அளித்திருக்கின்றன. ஆனால், எந்த தடுப்பூசியும் முழுவதுமான ஒப்புதலை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.