இ.நிவேதா
`இந்திய சினிமாவின் நைட்டிங்கேல்' எனக் கொண்டாடப்படும் லதா மங்கேஷ்கரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று. இந்த இசைக் குயிலின் வரலாறு, ஆனந்த கானங்களுடன் பல வாழ்க்கை ஆச்சர்யங்களையும் தந்து நம்மை நெகிழச் செய்வது.
1929-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி பிறந்தார், லதா மங்கேஷ்கர். தந்தை பண்டிட் தீனநாத் மங்கேஷ்கர், ஓர் இசைக்கலைஞர். அவர் லதா மங்கேஷ்கருக்கு இளம் வயதிலேயே இசை கற்றுக்கொடுத்தார். இசை பள்ளியிலும் சேர்த்தார்.
முதல் நாளில் லதா மங்கேஷ்கர் மற்ற குழந்தைகளுக்கு இசை குறித்து பாடம் எடுத்ததை தடுத்து நிறுத்தி ஆசிரியர் திட்டியதால், இசைப்பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டு, தன் தந்தையிடமே இசையைக் கற்றார்.
தீனநாத்தின் நாடகங்களில் லதா மங்கேஷ்கர் தனது 5வது வயதில் இருந்தே நடிக்க ஆரம்பித்தார். 1942-ம் ஆண்டு லதா மங்கேஷ்கருக்கு 13 வயதாக இருந்த போது அவரின் தந்தை திடீரென மரணம் அடைந்ததால், குடும்பத்தின் பொறுப்பு லதா மங்கேஷ்கரிடம் வந்தது.
குடும்பத்திற்காக உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தீனநாத்தின் நண்பர் மாஸ்டர் விநாயக், லதா மங்கேஷ்கர் குடும்பத்தை கவனித்துக்கொண்டார். படங்களில் நடிக்க சிறிய வேடங்களைக் கொடுப்பதாகவும் கூறினார். இதனால் லதா மங்கேஷ்கர் மும்பைக்கு சென்றார்.
தொடர்ந்து சில படங்களில் நடித்தாலும், அவருக்கு நடிப்புத் துறை பிடிக்கவில்லை. ஏற்கெனவே தன் தந்தையிடம் இசை பயின்றிருந்த லதா மங்கேஷ்கர் பாடல் பாடுவதில் ஆர்வம் காட்டினார்.
1943-ம் ஆண்டு `கஜாபாவ்' என்ற மராத்தி படத்தில் லதா மங்கேஷ்கர் முதன்முறையாகப் பாடினார்.
தனது 80 ஆண்டுக்கால திரையிசை வாழ்வில், 3 தேசிய விருதுகள், 15 பெங்காலி பட விருதுகள், 4 பிலிம்பேர் விருதுகள், பிலிம் பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றுள்ளார். அதோடு 1989-ம் ஆண்டு தாதாசாஹேப் பால்கே விருதையும், 2007-ம் ஆண்டு ஃபிரான்ஸ் குடியுரிமை விருதையும் பெற்றார்.
இசையமைப்பாளர்கள் மதன் மோகன், லட்சுமிகாந்த் பியாரிலால், ஆர்.டி.பர்மன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டவர்களின் இசையில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியிருக்கிறார்.
தமிழில் `சத்யா' படத்தில் `வளையோசை கலகலகலவென' போன்ற பிரபலமான பாடல்களைப் பாடியிருக்கிறார்.
1999-ம் ஆண்டிலிருந்து 2005-ம் ஆண்டு வரை லதா மங்கேஷ்கர் ராஜ்ய சபை உறுப்பினராக இருந்துள்ளார். லதாவின் இசை சேவைக்காக 2001-ம் ஆண்டு பாரத் ரத்னா விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்தில் ஒருவராகவே இருந்தவர் லதா மங்கேஷ்கர்.
அவரைப் பற்றிய நினைவுகள் குறித்து நடிகர் பிரபு கூறும்போது, `தீபாவளிக்கு வருஷா வருஷம் அவங்க குடும்பத்திலிருந்து எங்க வீட்டுல உள்ள எல்லாருக்கும் டிரெஸ் எடுத்து கொடுத்து அனுப்பி வைப்பாங்க. அதே மாதிரி அவங்களுக்கு நாங்க இங்கிருந்து அனுப்பி வைப்போம். அவங்கள அத்தைனு தான் கூப்பிடுவேன். அப்பா இறந்து பத்து நாட்களுக்கு பிறகு வீட்டுக்கு வந்திருந்தாங்க' என்றார்.
2022ல் லதா மங்கேஷ்கரின் 93-வது பிறந்ததினத்தையொட்டி, உத்தர பிரதேசம் அயோத்தி நகரில், 40 அடி உயரம் 14 டன் எடை கொண்ட பிரமாண்டமான வீணை திறக்கப்பட்டது. அந்த இடத்திற்கு ‘லதா மங்கேஷ்கர் சவுக்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
லதா மங்கேஷ்கர் கொரோனாவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் கொரோனாவிற்கு பிந்தைய சிகிச்சை பலனளிக்காமல் 2022 பிப்ரவரி 6 அன்று உயிரிழந்தார்.
இந்திய இசை ரசிகர்களிடம் விடைபெற்றுச் சென்றுவிட்ட லதா மங்கேஷ்கரின் தனித்த குரல் எப்போதும் கசிந்துகொண்டிருக்கும் நம் ப்ளேலிஸ்டில்!