கோபமா..? அப்படின்னா..? -எம்.என்.நம்பியார்


விகடன் பொக்கிஷம்
 
கோபமா..? அப்படின்னா..? எம்.என்.நம்பியார் - சிறப்புக் கட்டுரை

முப்பது வருடங்களுக்கு முன் நவாப் ராஜ மாணிக்கத்தின் நாடகக் கம்பெனி நீலகிரிக்குப் போயிராவிட்டால், சினிமா உலகிற்கு மஞ்சேரி நாராயணன் நம்பியார் கிடைத்திருக்கமாட்டார். கம்பெனியிலிருந்த சிறுவர்களைப் பார்த்துத் தானும் ஒரு நடிகனாக வேண்டும் என்ற ஆசை அவருக்கு ஏற்படவே, திடீரென்று ஒரு நாள் போய்ச் சேர்ந்து விட்டார்.

''நாடகத்தில் என்ன வேஷம் போடுவீர்கள்?''

''குடி... தடி... தாடி முதலிய வேஷங்கள்...''

''அப்படின்னா?''

''குடிமக்களில் ஒருவன், தடியைப் பிடித்துக் கொண்டு அரச சபையில் நிற்கும் சேவகன், ரிஷிகள், முனிவர்கள்...''

1935-ம் வருஷம் மைசூரில் கம்பெனி 'காம்ப்' இருந்தபோதுதான், பம்பாய் ரஞ்சித் ஸ்டுடியோவில் 'பக்த ராமதாஸ்' படமாக்கப்பட்டது. நம்பியார் நடித்த முதல் தமிழ்ப் படம் அதுதான். அதில் அவர் தெலுங்கில் வசனம் பேசியிருக்கிறார். அவருக்குக் கொடுக்கப்பட்ட பணம் 40 ரூபாய்!

நம்பியார் நடித்த இரண்டாவது படம் வெளி வரவேயில்லை. 1938-ம் வருடம் ஜி.பட்டு ஐயர் டைரக்ட் செய்த 'இன்ப சாகரன்' என்ற அந்தப் படம், ஸ்டுடியோவில் தீப்பிடித்துக்கொண்டபோது எரிந்துபோய்விட்டது.

இந்த இருபது ஆண்டுகளாக நம்பியார் என்கிற நட்சத்திரம் ஒளி குன்றாமல் சினிமா வானில் சுடர் விட்டுப் பிரகாசித்துக்கொண்டு வருகிறது. இதுவரை 105 படங்களில் நடித்திருக்கிறார் அவர்.

ஒவ்வொரு வருடமும் இரண்டு மலைகளுக்குப் போக அவர் தவறுவதில்லை. ஒன்று, நீலகிரி மலை; மற்றொன்று சபரிமலை.

நம்பியார் சைவ உணவுதான் சாப்பிடுகிறார். ''நான் ஓவல்டின், கேக், ஐஸ்கிரீம் இதெல்லாம் கூட சாப்பிட மாட்டேன். ஏன்... பிஸ்கோத்துகளைக் கூட கொஞ்சம் யோசித்துதான் தின்பேன். ஏன்னா, அதுலே கூட சில சமயம் முட்டையைக் கலந்துடறாங்க'' என்று சொல்லிச் சிரிக்கிறார்.

பொதுவாக நம்பியார் என்றதும், உருட்டும் விழி களும் மிரட்டும் தொனியும்தான் நமது ஞாபகத்துக்கு வரும். வீட்டிலோ அவர் சாது; பரம சாது!

''அவருக்குக் கோபமே வராதுங்க. சாதாரணமா ஒருத்தருக்குக் கோபம் வரக்கூடிய நிகழ்ச்சி நடந் தால் கூட இவருக்குக் கோபம் வர்றதில்லை. அப்படி ஒரு குணம். பொறுமையா இருப்பார். நிதானமாக நடந்துப்பார். சமீபத்திலே ஒரு லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள நகைகள் காணாமல் போனபோதுகூட துளிக்கூடப் பதற்றப்படாமல், 'நாம நியாயமா உழைச்சு சம்பாதிச்ச பணம்னா அது திரும்பி வந்துடும்'னு சொல்லிட்டே இருந்தார். அவர் சொன்ன மாதிரியே எல்லா நகைகளும் திரும்பக் கிடைச்சிட்டுது'' என்றார் திருமதி ருக்மணி நம்பியார்.

''படப்பிடிப்புக்குப் போயிட்டு வந்ததும் வீட்டில் எப்படி இருப்பார்?''

''படப்பிடிப்பிலே என்னென்ன நடந்தது, யார் யார்கிட்டே என்னென்ன பேசினார்ங்கிறதையெல் லாம் ஒண்ணுவிடாமல் சொல்வார். என்கிட்டே மட்டுமில்லை, யார்கிட்டேயும் எதையும் மறைக் காமல் சொல்வார். எதையாவது தமாஷா பேசி சிரிக்க வெச்சுடுவாரு. இவர் வீட்டிலே இருந்தால் போதும்... எனக்கு சிரிச்சு சிரிச்சு வயிறே புண்ணாயிடும். நான் யாரையாவது கொஞ்சம் கோபமா கண்டிச்சேன்னா, அவங்க எதிரிலேயே என்னிடம் 'கோபப்படாம நிதானமா பேசு'ன்னு சொல்வாரு. அதனாலே மத்தவங்க என்ன சொல்றாங்க தெரி யுங்களா... 'அய்யா ரொம்ப நல்லவரு. அம்மாதான் ஒரு மாதிரி'ன்னு சொல் றாங்க'' என்று கூறிவிட்டுச் சிரித்தார் ருக்மணி.

''உங்கள் கணவர் சிகரெட் குடிக் கிறாரே, அதற்கு நீங்கள் எதுவும் ஆட்சேபனை சொன்னதில்லையா?''

''இல்லீங்க. வருஷத்துக்கு ரெண்டே மாசம்தான் சிகரெட் குடிப்பார். மீதி மாசங்களிலே குடிக்கமாட்டார்.''

''அதென்ன கணக்கு?''

''என்னவோ அப்படி ஒரு பழக்கம்.''

''உங்களுக்கு எத்தனைக் குழந் தைகள்?''

''இரண்டு பையன்கள்; ஒரு பெண். அந்தக் காலத்திலேயே நாங்கள் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை மேற்கொண்டு விட்டோம்!''

''பொதுவா எத்தனை மணிக்குத் தூங்குவார்?''

''அவராலே நினைச்சவுடனே தூங்கமுடியுங்க. காரணம், கவ லையே இல்லாத மனசு. நாமும் சந்தோஷமா இருக்கணும், நம் மோட இருக்கிற மத்தவங்களும் சந்தோஷமா இருக்கணும்னு நினைப்பார். இவ்வளவு நல்லவ ருக்கு எப்போதும் வில்லன் வேஷமே தர்றாங்களேனு நான் கவலைப்படறது உண்டு. ஆனா, அந்தக் கவலை கூட அவருக்குக் கிடையாது. வேஷம்... அது எதுவானாத்தான் என்னங்கிறது அவர் நினைப்பு!''

''குழந்தைகளோடு அதிக நேரம் செலவழிப்பாரா?''

''முந்திதான் அது. இப்ப பொண்ணுக்குக் கல்யாணமாகிவிட்டது. பையன்கள் காலேஜுக்குப் போனதுக்கு அப்புறம், நண்பர்கள் யாரும் வராவிட்டால் நான் சமையல் வேலைகளை முடித்துக் கொண்ட பிறகு ரெண்டு பேரும் ஏதாவது கதை பேசிக்கிட்டு இருப்போம். 'பாட்மின்ட்டன்' ஆடுவோம். அவருக்கு பூகோளத்திலே ஆர்வம் உண்டு. ருசிகரமான விஷயங்கள் சொல்வார். ராத்திரியிலே பசங்களோடு சேர்ந்து சாப்பிட்டால்தான் அவருக்கு சாப்பிட்ட மாதிரி இருக்கும்.''

''வருஷா வருஷம் சபரிமலைக்குப் போகிறாரே... இங்கே கோயில்களுக்குப் போவது உண்டா?''

''இல்லீங்க. வீட்டிலேயே பூஜை அறை இருக்கு. நான் பூஜை செய்துகொண்டிருக்கும் போது அவர் வந்து கொஞ்ச நேரம் சாமி கும்பிட்டுட்டுப் போவார். அவ்வளவுதான்!''

''என் மனைவியைக் கேட்காமல் நான் எதையுமே செய்வதில்லை. எனக்கு ஷர்ட் தேர்ந்தெடுப்பதிலிருந்து எனக்கு வேண்டிய எல்லாக் காரியங்களையும் என் மனைவி தான் செய்வது வழக்கம். வீட்டு நிர்வாகத்திலிருந்து என்னை நிர்வகிப்பது வரை எல்லாமே என் மனைவிதான். மனைவிக்கு அடங்கிய கணவன் நான்!'' என்கிறார் நம்பியார்.

''நல்லவர்கள் எல்லோரும் தம் மனைவியை இப்படித்தான் புகழ்வார்கள். புகழவேண்டி இருக்கும். காரணம், அவர்களுடைய வாழ்வில் மனைவி ஒரு 'அஸெட்'! எனக்கு மனைவி தான் எல்லாமே என்று சொல்லிக்கொள்ள நான் வெட்கப்படுவதில்லை. சிவனே உமையைத் தன் உடலில்தானே வைத்துக்கொண்டு இருக்கிறார். கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள உறவுதான் (mutual understanding) வாழ்க்கையை அழகாக அமைக்க முடியும்! என் மனைவி எனக்குக் கண்கண்ட தெய்வம்!'' என்கிறார் நம்பியார்.

''இப்போதெல்லாம் வெளிப்புறப் படப் பிடிப்புக்குக்கூட நான் என் மனைவியை அழைத்துச் செல்கிறேன். அவள் நன்கு சமைப்பாள். நான்தான் மற்றவர்கள் தயாரிக்கும் உணவை விரும்பி ஏற்பதில்லையே!'' என்று நம்பியார் கூற, கலகலவெனச் சிரிக்கிறார் ருக்மணி.

 
- 1964, 1969, 1974-ல் வெளியான பேட்டிகளில் இருந்து தொகுத்தது.
                            
      

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick