வருங்காலத் தொழில்நுட்பம் : அண்டன் பிரகாஷ் | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/03/2010)

வருங்காலத் தொழில்நுட்பம் : அண்டன் பிரகாஷ்


அண்டன் பிரகாஷ்
வருங்காலத் தொழில்நுட்பம்
 

லைதளம் ஒன்றின் பயன் எப்படி இருந்தாலும் சரி, அதன் மதிப்பு அதற்கு எத்தனை பேர் வருகிறார்கள் என்பதில்தான் இருக்கிறது. டிராஃபிக் என்று பரவலாக அறியப்படுகிற இந்த வரவுப் போக்குவரத்தை அதிகரிக்க வலைதள நிறுவனங்கள் கையாளும் பல்வேறு டெக்னிக்குகள், ஸ்டன்ட்டுகள் மிக சுவாரஸ்யமானவை. new.half.com என்ற வலைதள நிறுவனம் தொடங்கப்பட்டு, மார்க்கெட்டிங் செய்ய அத்தனை பணம் இல்லாததால், செலவு குறைவாக எப்படித் தங்களது வலைதளத்துக்கு டிராஃபிக் கொண்டுவரலாம் என்று யோசித்து, அசத்தலான ஐடியா ஒன்றைச் செயல்படுத்தியது. சில நூறு பேரே இருக்கக்கூடிய சின்ன நகர் ஒன்றின் நகர சபையிடம் அவர்கள் தங்கள் ஊரின் பெயரை மாற்றிக்கொண்டால் அவர்களுக்குப் பணம் கொடுப்பதாகக் கூற, ஓரேகான் மாநிலத்தின் ஓர் ஊர் ஓ.கே. சொல்ல அதன் பெயர் Half.com என்று மாற்றப்பட்டது. 'இது என்ன நூதனம்?' என்ற ஆவலில் டி.வி, பத்திரிகை மீடியாக்கள் இதற்கு கவரேஜ் கொடுக்க, சில மாதங்களிலேயே அந்த வலைதளத்தின் டிராஃபிக் பல நூறு மடங்கு அதிகரிக்க, ஈபே நிறுவனம் அதனை வாங்கிக்கொண்டது. இதுபோல பல உதாரணங்கள். இணையம் எதையும் சாத்தியமாக்குகிற ஒரு விசாலமான விளையாட்டு அரங்கு என்பதைத் தொடர்ந்து நிரூபித்து வருகிறது.

இணையத்தை மிகச் சொற்பமாகப் பயன்படுத்துபவர்கள்கூட யுடியூப் (new.youtube.com) பற்றித் தெரியாமல் இருக்க முடியாது. பயனீட்டாளர்கள் தாம் எடுத்த வீடியோக்களைப் பதிவேற்றி, மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள யு டியூப் போன்ற எளிதான வலைதளம் வேறு இல்லை. சிறிய அளவில் 2005-ல் தொடங்கப்பட்ட இந்தத் தளம், கிடுகிடுவென பிரபலமாக, ஒரு வருடத்துக்குள் கூகுள் 1.65 பில்லியனுக்கு வாங்கிக்கொண்டது. பேபால் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த மூன்று இளைஞர்களால் தொடங்கப்பட்ட யுடியூப் கூகுளுக்கு மிக முக்கியம். காரணம், இந்தத் தளத்தின் டிராஃபிக். அதன் உதவியால் காட்டப்பட முடிகிற விளம்பரங்களில் இருந்து வரும் மில்லியன் டாலர்கள். 'என் பூனை செய்யும் சேட்டைகள்', 'என் நண்பனின் மோட்டார் சைக்கிள் வித்தைகள்' என்றெல்லாம் மானாவாரியாகப் பயனீட்டாளர்கள் பதிவேற்றம் செய்யும் வீடியோக்களின் மூலமாகத்தான் இந்த டிராஃபிக் உருவாகிறது என்றாலும், யு டியூபின் தொடக்க நாட்களில் திருட்டு வீடியோக்களைப் பகிர்ந்துகொள்ளும் தளமாகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டதாக வயாகாம் நிறுவனம் (new.viacom.com) தொடுத்த வழக்கு விசாரணைக்குச் சென்ற வாரம் வந்தது. காப்பிரைட் செய்யப்பட்ட திரைப்படங்களையும், சின்னத் திரை நிகழ்ச்சிகளையும் திட்டமிட்டுத் திருடியதன் அத்தாட்சியாக யு டியூப் நிறுவனர் ஒருவரின் இ-மெயிலை கோர்ட்டில் வயாகாம் சமர்ப்பிக்க; கூகுளோ, வயாகாம் தனது நிறுவன ஊழியர்களை நூலகங்கள் போன்ற பொது இடங்களில் இருந்து வீடியோக்களைப் பதிவேற்றம் செய்து, வேண்டுமென்றே யு டியூபைச் சிக்கலில் மாட்டிவைக்கச் சதி செய்தது என்பதைத் தங்களால் நிரூபிக்க முடியும் என்று பதிலடி கொடுத்துள்ளது. வயாகாம் சமர்ப்பித்த, 'Steal it' என்ற தலைப்பிட்ட இ-மெயிலைப் படித்துப்பார்த்தால், யு டியூபின் நிறுவனர் சீரியஸாகச் சொன்னதுபோல் தெரியவில்லை என்றாலும், கோர்ட் இதை எப்படி எடுத்துக்கொள்ளும் என்பது வலையுலகில் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க