துணி வெளுப்போம்.... மனம் வெளுப்போம்! | துணி வெளுப்போம்.... மனம் வெளுப்போம்! | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/11/2011)

துணி வெளுப்போம்.... மனம் வெளுப்போம்!

''துணிவெளுக்க மண்ணுண்டு எங்கள்   
  முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரீ...’ இது பாரதியின் பாடல் வரிகள். ஆனால், துணி வெளுக்க மட்டுமில்லை; மனம் வெளுக்கவும் தங்களால் இயலும் என்று நிரூபித்துக் காட்டிஇருக்கிறார்கள், திருவண்ணாமலை சலவைத் தொழிலாளர்கள். அந்தக் கதையைச் சொல்கிறார் சலவைத் தொழிலாளர் சங்க ஒருங்கிணைப் பாளர் தா.மா.பிரகாஷ்.  

''எங்க பரம்பரைக்கே 400 வருஷமா சலவைத் தொழில்தான். 26 குடும்பங்கள்ல ஆரம்பிச்சு இப்ப 60 குடும்பங்கள் இங்கே துணி துவைக்கிறாங்க. 1945-ம் வருஷம் 'திருவருணை சலவைத் தொழிலாளர் சங்கம்’னு ஒரு அமைப்பைத் தொடங்கி பல கோரிக்கைகள் வெச்சோம். ஆனா, திருவண்ணாமலை நகராட்சி எங்கள் கோரிக்கைகளைக் கண்டுகொள்ளவே இல்லை.

1983-ம் வருஷம் திருவண்ணாமலையில் இருக்கும் சலவைத் தொழிலாளர்களை ஒருங்கிணைச்சு 'சலவைத் தொழிலாளர் நலச் சங்கம்’னு பெரிய அளவில் ஒரு அமைப்பைத் தொடங்கினோம். நாங்கள் தொழில் செய்வதற்கு இன்னும் வசதியான துறை, தண்ணீர் தொடர்ச் சியா வர்றதுக்குக் கிணறு, குழந்தைகள் விளை யாடறதுக்கு மைதானம்னு எங்க வாழ்வியல் சூழலுக்குத் தேவையான அத்தியாவசியக்   கோரிக்கைகள்தான் வெச்சோம்.

திருவண்ணாமலையே திரும்பிப் பார்க்கிற மாதிரி பல முறை கழுதைப் போராட்டங்களை நடத்தினோம்.

ஒருவழியாக 1991-ம் வருஷத்துல எங்க கோரிக்கைகளுக்கும் தீர்வு கிடைச்சது. அப்ப இருந்த கலெக்டர் தோழப்பன் முயற்சியால் 1.35 லட்ச ரூபாய் செலவில் சலவைத் துறையை உருவாக்க முன்வந்தாங்க. சலவைத் துறையை நகராட்சி கட்டிக்கொடுத்தது. ஆனால், வெறுமனே தொழில் செய்வதோடு எங்கள் வாழ்க்கைத் தேவைகள் முடிஞ்சுபோகலைனு எங்களுக்குத் தெரியும். அதனால் நாங்களே நிதி திரட்டி 10 லட்சம் ரூபாய் மதிப்பில் கிணறு, நூலகம், விளையாட்டு மைதானம்னு  பலவிதமான வசதிகளை ஏற்படுத்தி இருக்கோம். அதோடு, எங்கள் சங்கம் மூலமா எங்களுக்கான விதிகளையும் உருவாக்கியிருக்கோம்.

எல்லோருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக் கிழமை விடுமுறையை அறிவித்திருக்கிறோம். மேலும், ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று சங்கக் கூட்டம் நடத்தி, எங்க பிரச்னைகளைப் பேசித் தீர்த்துக்கொள்கிறோம்.

ஆரம்ப காலங்களில் வெள் ளாவி போட்டுத் துவைத்த தால் முட்டை ஓடு மாதிரி துணி அவ்வளவு வெண் மையா இருக்கும். இப்ப அந்த மாதிரி முறைகள் கிடையாது. ப்ளீச்சிங் பவுடர், சோப்புத் தூள், டெட்டாயில், ஒஸ்தி நீலம், வயலெட், ரோஸ் டினோபால்னு பலவிதமான பொருட்களைப் பயன் படுத்தி துணி துவைக்கிறோம். சுத்தமான மலையடிவாரத்து கிணற்றுத் தண்ணீரில் சுகாதாரமான முறையில் துவைத்து உலர்த் திக் கொடுக்கிறோம்.

வாழ்க்கையே மாறுறதும் மாத்திக்கறதும்தானுங்களே...'' என்று புன் சிரிப்போடு முடிக்கிறார் பிரகாஷ்!  

- காசி.வேம்பையன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க