10 செகண்ட் கதைகள்

ஓவியங்கள்: செந்தில்

விலை! 

நிரம்பி வழியும் கல்லூரி மாணவர்கள் 4,000 பேர் முன்பு பேசிவிட்டு வந்ததில் இருந்து முன்னாள் அமைச்சருக்கு இருப்பு கொள்ளவில்லை. உடனே ஆள் அனுப்பினார் கல்லூரியை விலைபேச!

- சி.சாமிநாதன்


பாடம்

'சதா 'படி... படி’னு நச்சரிச்சுட்டே இருந்தா அவனுக்குப் போரடிக்காதா?' என மனைவியிடம் சத்தம் போட்டுவிட்டு, 'இந்தா... நீ போய் விளையாடுடா' என, தனது ஸ்மார்ட்போனை மகனிடம் கொடுத்தார் பி.டி மாஸ்டர் கேசவன்!

- அஜித்


கடைசி விருப்பம்

குடும்பநல கோர்ட்டில் விவாகரத்து வாங்கிக்கொண்ட ராஜூவும் தேனுஜாவும் கடைசி விருப்பமாக செல்ஃபி எடுத்துக்கொண்டு பிரிந்தார்கள்!

- பெ.பாண்டியன்


வரம்

''எமன் வந்தபோது ஈஸ்வரனைக் கும்பிட்டதால் மார்க்கண்டேயன் சாகாவரம் பெற்றான்' என, கதை சொன்னார் தாத்தா. 'ஓ... அப்ப அவர் இன்னும் உயிரோடு இருக்காரா... எங்க?' எனக் கேட்டான் பேரன்!

- ஜோதீஸ்வரி


பெருமிதம்

அப்பா, அம்மா, சித்தி, அத்தை, மாமா, பெரியப்பா... என அனைவரையும் ஒன்றுசேர்த்து 'கலக்கிட்ட போ’ என்ற கமென்ட்டைக் கேட்டுப் பெருமிதம்கொண்டான் புதிதாக ஃபேமிலி வாட்ஸ்அப் குரூப் தொடங்கிய விசு!

- சாய்ராம்


பொய்

''பொய் சொல்லக் கூடாது... சாமி கண்ணைக் குத்தும்'' என்றேன் மகனிடம். ''இந்த மாதிரி பொய் சொன்ன... நான்தான் உன் முகத்தில் குத்துவேன்'' என்றவாறு செல்லமாக என் முகத்தில் குத்தினான் மகன்!  

- ரஹீம் கஸாலி


தப்பித்தல்

அந்த நடு இரவில் காம்பவுண்ட் சுவரின் மேல் ஏறிக் குதித்தவன், தன்னை யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்டு கதவு அருகே வந்து, சாவிகளில் ஒன்றை எடுத்துத் திறந்து, வீட்டுக்குள் நுழைந்து, கதவைச் சாத்திக்கொண்டான். 'அப்பாடா... லேட்டா வந்ததை ஹவுஸ் ஓனர் பார்க்கலை.’

- ஆர்.வி.சரவணன்


திருட்டு

எவரும் அறியாமல் ஃப்ரிட்ஜில் இருந்து ஐஸ்க்ரீம் எடுத்து சத்தம் இல்லாமல் சாப்பிட்டுத் திரும்பினால், வெடித்து அழத் தயாராக என் மகள்!

- வீ.அரவிந்தன்


ஊதியம்

''கணேசன் எப்படி இருக்கான்... குறைஞ்ச சம்பளத்துல கஷ்டப்பட்டானே!''

''வேற கம்பெனியில நல்ல சம்பளத்துக்கு மாறிட்டான். அவன் உழைப்பு வீண் போகலை!''  

- அறச்செல்வன்


கடமை

''மணி 10 ஆவுது, வாடி... பாருக்குப் போலாம்'  பக்கத்து வீட்டு லதாவை அழைத்தாள் கற்பகம்... டாஸ்மாக்கில் விழுந்துகிடக்கும் தத்தமது கணவர்களைத் தூக்கி வர!

- ஷ்யாமா பிரேம்


Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick