"உண்மையை மட்டும்தான் பேசுவேன்!”

பா.ஜான்ஸன்

‘‘ ‘வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான். கறுப்பா இருக்குறவன் உண்மையை மட்டும்தான் சொல்வான்' - இதுதான் என் படத்தின் அவுட்லைன். அதனால்தான் படத்துக்குப் பேரே 'வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்'னு வெச்சிருக்கேன்'' எனச் சிரிக்கிறார் அபநிந்திரன்.  படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளரும் இவர்தான். ராஜீவ் மேனனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த அபநிந்திரனுக்கு இது முதல் படம். ஓவியர் ஆதிமூலத்தின் மகன் இவர்.

''படத்துக்கு வித்தியாசமா பெயர் வெச்சாதான் கவனிப்பாங்கனு இப்படி வெச்சுட்டீங்களா?''

"வெறுமனே கவன ஈர்ப்புக்காக மட்டும் இந்தப் பேர் வைக்கலை. கதைக்கு ரொம்பப் பொருத்தமான தலைப்பு. முகம் தெரியாத யாரையோ சந்திக்கக் காத்திருப்போம். அவர் வந்ததும் அவருடைய தோற்றத்தை வெச்சு, ‘இவன் விஷயம் தெரிஞ்சவனாத்தான் இருப்பான்'னு நினைப்போம். இல்லைன்னா, ‘இவனுக்கு என்ன தெரியப்போகுது?'னு நினைப்போம். இப்படி நம்மளை அறியாம ஒவ்வொருத்தரைப் பத்தியும் ஒரு அபிப்பிராயம் நம்ம மனசுக்குள்ள உருவாகுது. இதன் மூலமா அந்த நிமிஷம் நமக்கு எந்தப் பிரச்னையும் கிடையாது. ஆனா என்னைக்கோ ஒருநாள் இது நம்மளைப் பாதிக்கலாம். ‘அன்னைக்கே அவரோட பேசி முடிவு எடுத்திருக்கலாம். உண்மையைச் சொல்லியிருந்தா, இந்தப் பிரச்னையே வந்திருக்காது'னு எப்பயாவது நினைப்போம்ல... அதுதான் இந்தப் படம்.''

‘‘காமெடிப் படமா?''

‘‘கன்டென்ட் உள்ள படம். டிரெய்லர் பார்த்தீங்கன்னா, ஒவ்வொரு கேரக்டரும் ரொம்ப சீரியஸாத்தான் பேசிட்டிருப்பாங்க. ஆனா, பாக்கிறவங்களுக்கு காமெடியாத் தெரியும். ஒருத்தருக்குப் பெரிய பிரச்னையா தெரியுற விஷயம்,  இன்னொருத்தருக்கு காமெடியாத்தானே தெரியுது? அப்படிப் பார்த்தா, இதை காமெடி படம்னுகூடச் சொல்லலாம். அதே நேரம் சும்மா தியேட்டருக்கு வந்து சிரிச்சிட்டுப் போற படமா மட்டும் இது இருக்காது. இந்தப் படத்தை சிலருக்குப் போட்டுக் காண்பிச்சேன். ஜெயப்பிரகாஷ் கேரக்டரைப்  பார்த்துட்டு ‘நான் எங்க அப்பாவை ரொம்ப மிஸ் பண்றேன்’னு சொன்னாங்க. படத்தில் அவ்வளவு எமோஷன்ஸ்''

‘மின்சாரக் கனவு' சமயத்திலேயே சினிமாவுக்கு வந்துட்டீங்க. ஆனா, ஒரு படம் இயக்க ஏன் இவ்வளவு தாமதம்?''

‘‘எங்க அப்பா ஒண்ணு சொல்லுவார்... '10 விஷயங்கள் பண்ணு. யாரும் கவனிக்கலையா? 100 விஷயங்கள் பண்ணு. அப்பவும் கவனிக்கலேன்னா, ஆயிரம் பண்ணு. எப்பவும் எதுக்கும் தேங்கி நிற்காதே'. எல்லாரும் கவனிக்கணும்கிறது நம்ம கையிலதானே இருக்கு.  யாரும் பார்க்கலைனு ஏன் மத்தவங்களைக் கை காட்டணும்? இந்த தாமதத்தைக்கூட, இன்னும் ஆழமா சினிமாவைக் கத்துக்கக் கிடைச்ச வாய்ப்புனுதான் எடுத்துக்கிறேன். ராஜீவ் மேனன் சார்கிட்ட கிட்டத்தட்ட 100 விளம்பரங்களுக்கு மேல வேலை செய்திருப்பேன். அவர்கிட்ட கத்துகிட்டது, ஷார்ப்னெஸ். சொல்லவந்த விஷயத்தை ஷார்ட்டா சொல்றது. ஒரு விளம்பரத்துக்கு 30 விநாடிதான் டைம். அதுக்குள்ள நீங்க சொல்லிப் புரியவைக்கணும். அப்போ நாம எவ்வளவு விஷயம் யோசிக்கணும். அதில் அவர் ஷார்ப்பான ஆள்.

‘‘இளம் இயக்குநர்களின் ஃப்ரெஷ் ஐடியாக்களோடு, எப்படிப் போட்டி போடப்போறீங்க?''

‘‘ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். நான் முடிஞ்ச வரை நம்ம ஊர்ல இருக்கும் விஷயங்கள்ல இருந்து கதை பண்ண முயற்சி பண்றேன்.  எல்லா விஷயத்தையும் ரசிக்க ஆட்கள் இருக்கும்போது, எல்லாவிதமாவும் படங்கள் வரணும்தானே?'' - பக்குவத்துடன் பேசுகிறார் அபநிந்திரன்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick