ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

விகடன் வாசகர்களுக்கு வணக்கம். நான் எழுத்தாளர் ஜோதிமணி பேசுகிறேன்...

பள்ளியில், கல்லூரியில் மாணவர்கள் எந்தப் பாடத்தில் சேர்கிறார்களோ, அதை மட்டும் படித்தால் போதும் என்பதுதான் இன்றைய கல்விமுறை. மாணவர்கள் விளையாடுவதற்கு, சுதந்திரமாக இயங்குவதற்கு, பாடம் தவிர்த்த வேறு விஷயங்களைச் சிந்திப்பதற்கு ஏற்றதாக  இந்தக் கல்விமுறை இல்லை. ஆனால் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றாலும், வேலைக்குச் செல்லும்போது படிப்பைத் தாண்டிய திறன்களை நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. பள்ளி - கல்லூரிகளில் திறன் மேம்பாடு ஒரு பகுதியாக இல்லாததால் வரும் விளைவு இது. திறன்மேம்பாடு எவ்வளவு முக்கியம் தெரியுமா?

முன்னர் நம் குடும்ப அமைப்பு விவசாயம் சார்ந்ததாக இருந்ததால், அனைவரும் ஒன்றாக வேலைசெய்வார்கள்; ஒன்றாக அமர்ந்து உணவு அருந்துவார்கள்; ஒன்றாகத் திருவிழாக்களுக்குச் செல்வார்கள். ஒரு கிராமமே தன் குடும்பமாக இருந்த சூழல் மாறி, இன்று ஒவ்வொரு குடும்பமும் ஒரு தீவாக வாழத் தொடங்கிவிட்டது. தொலைக் காட்சி, செல்போன், ஃபேஸ்புக் எனத் தொழில்நுட்பங்களும் அந்த இடைவெளியை இன்னும் அதிகப்படுத்திவிட்டன. இந்த நேரத்தில் நாம் உறவுகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

வளர்ச்சி  ஒன்றே குறிக்கோளாக இருக்கும் சமூகத்தில், சுற்றுச்சூழல் மற்றும் நீர் மேலாண்மை போன்றவை வளர்ச்சியின் ஒரு பகுதியாகக்கூட இல்லாமல் பின்தங்கிவருகிறது. சமீபத்தில் சென்னை உள்பட பல பகுதிகளில் ஏற்பட்ட மழை வெள்ளப் பெருக்கு அன்றாட வாழ்க்கையை ஸ்தம்பிக்கச்செய்தது. காரணம், நமது தவறான நீர் மேலாண்மை. இந்தியாவின் பல பகுதிகளில் இருக்கிற ஊர் அமைப்புகளைக் கவனித்தால் தெரியும்... மழைநீரைச் சேகரிக்க ஏரிகள், குளங்கள், வடிகால் பாதைகள் போன்றவற்றை மிகக் கவனத்தோடு அமைத்திருப்பார்கள். நகரமயமாக்கல் அதை எல்லாம் சீர்குலைத்துவிட்டது. `மழைத் தண்ணீர் வீட்டுக்குள் வந்துவிட்டது’ எனக் குறை சொல்கிறோம். ஆனால், அதன் இடத்தில் நாம் வீட்டைக் கட்டியிருக்கிறோம். இதனால் உருவாகவிருக்கும் பாரதூரமான விளைவுகள் பற்றி சொல்லவா?

மதுவிலக்கு தொடர்பான விவாதங்களும் போராட்டங்களும் தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன. குடிப்பவர்கள் எண்ணிக்கையோ அதைவிட அதிகம். குடியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும் குழந்தைகளும்தான். மறைவான இடத்தில் மது அருந்திய காலம் போய், இப்போது சாதாரணமாக மது அருந்தும் சூழல் இருக்கிறது. இந்த நிலை மாற நாம் செய்ய வேண்டியது என்ன?

3-12-15 முதல் 9-12-15 வரை 044-66802911* என்ற எண்ணில் அழையுங்கள். நல்லவை பேசுவோம்.

அன்புடன்,

ஜோதிமணி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick