நாடறிந்த பித்துக்குளி!

ஜெயப்பிரகாஷ்

`நாடறியும் நூறு மலை... நானறிவேன் சுவாமிமலை...’ நம் தமிழ் தொலைக் காட்சி சானல்கள் ஏதாவது ஒன்றில், தினமும் ஒலிக்கும் பாடல். வசீகரிக்கும் குரல்; கேட்பவர் யாராக இருந்தாலும் பக்திப் பரவ சத்தில் ஆழ்த்திவிடும் சாரீரம்; அழுத்தம் திருத்தமான தமிழ் உச்சரிப்பு. 1972-ம் ஆண்டு, ‘தெய்வம்’ திரைப்படத்தில் ஒலித்த அந்தக் குரல் பட்டிதொட்டியெல்லாம் பல வருடங்களுக்கு ஒலித்தது. அந்த கணீர்க் குரலுக்கு சொந்தக்காரரான பித்துக்குளி முருகதாஸ் இன்று நம்மிடையே இல்லை. கடந்த நவம்பர் 17-ம் தேதி, தமது 95-வது வயதில்  இயற்கை எய்தினார்.

கோயம்புத்தூரில் 1920-ம் ஆண்டு பிறந்த அவரின் இயற்பெயர் பாலசுப்ரமணியம். பாட்டியிடம் பாடல் கற்றுக்கொண்டவருக்கு, பக்திப் பாடல்கள் மீது ஆழ்ந்த பற்று ஏற்பட்டது. உள்ளம் உருகிப் பாடி, கேட்பவர்களை பக்தியில் திளைக்கச் செய்தார். ரமணரை தன் குருவாக வரித்துக்கொண்டார். இலங்கை, மலேசியா, மொரீசியஸ், சிங்கப்பூர், அமெரிக்கா, நேபாளம் என பல நாடுகளில் அவருடைய குரல் ஒலித்தது; லட்சக்கணக்கான ரசிகர்களை வசியம் செய்தது.

1995-ல் தென்னாப்பிரிக்கா, டர்பனில் நடைபெற்ற உலக இந்துக்கள் மாநாட்டில் பித்துக்குளி முருகதாஸும், நெல்சன் மண்டேலாவும் சிறப்பு விருந்தினர்கள்.  முருகதாஸ் கலந்து கொள்ளும் கூட்டம்... அவர் பாடல் இல்லாமலா? பாடினார்... கூட்டம் மெய் மறந்தது; ஆரவாரம் விண்ணைப் பிளந்தது. மண்டேலா, பித்துக்குளியிடம் சொன்னார்... ‘எங்க ஊர்ல என்னைவிட உங்களுக்குத்தான் செல்வாக்கு ஜாஸ்தி!’

பக்திப் பாடகர் வீரமணி ராஜு சொல்கிறார்... ‘‘25 வருடங்களுக்கு முன்னால, திருத்தணியில படிபூஜை. என்னைக் கூட்டிட்டுப் போயிருந்தார். மலையடிவாரத்துல கழுத்துல ஆர்மோனியப் பெட்டியை மாட்டிக்கொண்டவர், ஒவ்வொரு படிக்கும் ஒரு திருப்புகழ்னு பாட ஆரம்பிச்சார்.  ஆறு மணி நேரத்துக்கும் மேல ஆகிடுச்சு. ஒரு இடத்துலகூட சோர்வே அடையலை. எனக்கு மெய் சிலிர்த்துடுச்சு!’' என்கிறார்.

‘நான்’ என்கிற வார்த்தையையே துறந்தவர்; தன்னை ‘இவன்’ என்றே அழைத்தவர்; பார்க்கிற வர்களிடம் எல்லாம் ‘தமிழை மறந்துவிடாதே! தெய்வத்தை துறந்துவிடாதே!’ என்று சொன்ன `இவன்' இப்போது நம்மிடம் இருந்து விடைபெற்றுவிட்டார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick