மனம் பிறழ்ந்தவன்

கவிதை: தர்மராஜ் பெரியசாமி

ந்நீள் தெருவின் கடைக்கோடியில் வசிக்கும் 

என் சகோதரியின் வயதையொத்த அவள்

எங்கள் வீட்டைக் கடக்கையில்

மெல்லியதாய்ப் புன்னைகைப்பாள் என்னிடம்.

முழுச் சந்திரன் முழுமை பெறும் நாளில்

உக்கிரத்தை அடையும் அவள்

மனம் பிறழ்ந்தவளெனக் கேட்டறிந்தவன்.

ஒரு மாலையின் எதிர்பாரா மழையில்

அவள் வீட்டுத் திண்ணையில் தன்னிச்சையாய்

ஒதுங்கிய என்னை உள் அழைத்து

’நனைஞ்சுட்டியா தம்பி?’ என வாஞ்சையாகத்

தாவணித் தலைப்பில் தலைதுவட்டி

நடுங்குமிந்த உடலுக்கும் உள்ளத்துக்கும்

தேநீரையும் அன்பையும்

கதகதப்பாய்த் தந்துவிட்டு புன்னகைக்கிறாள்.

பரவசம் படரும் அத்தருணத்தில்

அவளெனக்கு சகோதரி என்பது மட்டும்

போதுமானதாய் இருந்தது

அக்கணத்தை முழுவதுமாய் அனுபவிக்க.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick